×

என் ஊர் மக்களுக்காகவே கண்காட்சி நடத்தினேன்!

நன்றி குங்குமம் தோழி

புகைப்பட கலைஞர் கபிலன் சௌந்தராஜன்

ஒரு புகைப்படம்


ஆயிரம் வார்த்தைகளுக்கு சமம் என்ற வாக்கியம் உண்டு. நம்முடைய மூன்றாவது கண்களை பிரதிபலிப்பதுதான் புகைப்படங்கள். இப்போது எல்லோர் கையிலும் கேமரா உள்ளது. செல்ஃபி எடுப்பதும் வழக்கமாகிவிட்டது. பார்ப்பதை எல்லாம் படம் பிடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதே சமயம் அதை மற்றவர்களும் ரசித்து பார்க்கும் படி படம் பிடிப்பவர்கள் என்றால் ஒரு சில பேர் தான். அந்த ஒரு சிலர்களில் கபிலனும் ஒருவர். இவர் புகைப்படக் கண்காட்சியில் கலந்து கொண்டு விருதுகளையும் பெற்றுள்ளார்.

‘‘நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கும்பகோணம் அருகேயுள்ள கடமங்குடி என்ற கிராமம். விவசாய குடும்பம். ஒரு அண்ணன், ஒரு தங்கச்சி. எனக்கு சின்ன வயசில் இருந்தே புகைப்படம் எடுப்பது மேல் தனி ஆர்வம் உண்டு. பள்ளி படிப்பு முடித்ததும் எப்படியாவது விஸ்காம் படிப்பு இருக்கும் கல்லூரியில் சேரணும்ன்னு விரும்பினேன். ஆனால் வீட்டு சூழ்நிலை காரணமாக என்னால் பி.காம் தான் படிக்க முடிந்தது. முதுகலை பட்டம் கல்லூரியில் சேர்ந்து படிச்சா செலவாகும்னு தொலைதூர வழி கல்வி முறையில் படிச்சேன். என்னுடைய சித்தப்பாவிடம் டிஜிட்டல் கேமரா இருந்தது.

எங்க வீட்டில் நடக்கும் விசேஷங்களுக்கு எல்லாம் என்னை அதில் புகைப்படம் எடுக்க சொல்வார். நான் பாதி நேரம் வெளியே போய், பூ, மரம், செடி கொடிகளை எல்லாம் படம் பிடித்துக் கொண்டு இருப்பேன்’’ என்றவர் தான் எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் பதிவேற்றமும் செய்துள்ளார். ‘‘எல்லாமே டிஜிட்டல் மயமாகிவிட்டதால், நானும் அதை எனக்காக பயன்படுத்திக் கொண்டேன்.

கையில் கேமரா இல்லையென்றாலும், என்னுடைய செல்போனில் நான் எடுக்கும் ஒவ்வொரு புகைப்படங்களையும் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக், இன்ஸ்டாவில் எல்லாம் பதிவு செய்ய ஆரம்பித்தேன். நண்பர்கள் மட்டுமில்லாமல், பலரிடம் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைச்சது. அது என்னை மேலும் ஊக்குவித்தது. சமூக வலைத்தளம் வழியாக பல பெரிய புகைப்படக் கலைஞர்களை பின் தொடரும் வாய்ப்பும் கிடைத்தது. அதில் அவர்களது பதிவுகளையும் புகைப்படங்களையும் பார்த்தே பல நுணுக்கங்களை கற்றுக்கொள்ள முடிந்தது.

படிப்பு முடித்து சென்னை வந்தேன். நண்பர் ஒருவரின் உதவி மூலம், ஒரு உணவகத்தில் காசாளர் வேலை கிடைத்தது. அங்கு வேலை செய்யும் கணக்கு மேலாளர் என் வேலையை பார்த்து, என் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரு நல்ல ஆடிட்டரிடம் சேர்ந்து வேலை பார்க்கும்படி அறிவுறுத்தினார். சில வேலைகள் மாறி கடைசியாக ஒரு நல்ல வேலை கிடைத்தது. சுரேஷ் என்ற ஆடிட்டரிடம் வேலைக்கு சேர்ந்தேன். வேலை எல்லாம் முடித்ததும், போட்டோகிராஃபி சம்மந்தமான கட்டுரைகள், காணொளிகளை பார்ப்பது என்னுடைய வழக்கம். அதை அவர் கவனித்து வந்துள்ளார்.

போட்டோகிராஃபி மேல் இருக்கும் என் ஆர்வத்தை புரிந்து கொண்டவர் ஒரு கேமரா வாங்கிக்கொள்ள சொல்லி முப்பது ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அதனுடன் நான் சேர்த்து வைத்திருந்த இருபதாயிரத்தையும் சேர்த்து ஒரு கேமரா வாங்கினேன்’’ என்றவர் தான் முழுமையாக புகைப்பட கலைஞராக மாறியது குறித்து விவரித்தார்.

‘‘ஒரு முறை ரயிலில் பயணித்த போது, என் எதிரே பயணி ஒருவர் எழுத்தாளர் சுஜாதாவின் ‘திரைக்கதை எழுதுவது எப்படி?’ என்ற புத்தகத்தை படித்துக் கொண்டு இருந்தார். அவரிடம் ஆர்வத்துடன் பேச்சுக் கொடுத்த போதுதான், அவர் பெயர் ஜோசப் ராஜா, இளையராஜாவின் ஆஸ்தான புகைப்பட நிபுணர் என்று தெரிந்தது.

அவருடன் பேசிய போது தான் தெரிந்தது, பல இளைஞர்கள் ஆர்வத்துடன்  கேமரா வாங்குவதோடு சரி. சில மாதங்களிலேயே அதை உபயோகிக்காமல் பாழாகிவிடுகிறது. ‘‘நீயும் அவர்களை போல் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் கேமராவை வாங்கி உபயோகப்படுத்தாமல் இருந்திடாதே’’ ன்னு அறிவுரை கூறினார். மேலும் சென்னையில் ஞாயிற்றுக்கிழமைகளில், புகைப்படக்கலைஞர்கள் இணைந்து ஒரு வாக் செல்வார்கள். அங்கு சென்றால், அவர்களுடன் சேர்ந்து போட்டோகிராஃபி கற்றுக்கொள்ளலாம் என்றும் ஆலோசனை சொன்னார்.

அதனால் அப்படி போன போது தான் ரமணி சந்திரன் புகைப்பட கலைஞரின் பயிற்சி பள்ளி பற்றி தெரிந்தது. அவரிடம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். சென்னை போட்டோ குழுவில் இணைந்து, மூன்று வருடம் பயணித்து பல நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். அந்த குழுவும் என்னை ரொம்பவே ஊக்கப்படுத்தியது. போட்டோகிராஃபி போட்டியிலும் கலந்து கொண்டேன். அந்த போட்டியில் மூன்று பிரிவுகள் இருந்தது. நான் மூன்றிலும், கலந்து கொண்டேன், அதில்  இரண்டு பிரிவுகளில் விருது கிடைத்தது.

இன்னொரு பக்கம் - அம்மா, அப்பாவிற்கு நான் ஐம்பதாயிரத்திற்கு கேமரா வாங்கியதில் உடன்பாடு இல்லை. அதை அவர்கள் என்னிடம் நேரடியாக சொல்லவில்லை. என்றாலும் அந்த பணத்தில் நான் வேலைக்கு சுலபமாக போய் வர ஒரு வண்டி வாங்கி இருக்கலாம் அல்லது தங்கையின் திருமண செலவிற்கு பயன்படுத்தி இருக்கலாம் என்பது அவர்களின் ஆதங்கமாக இருந்தது. அவர்களுக்கு நான் நல்ல விஷயத்திற்கு தான் செலவு செய்திருக்கிறேன் என்று என் பக்க நியாயத்தை எடுத்து சொல்ல விரும்பினேன்.

நான் எடுத்த புகைப்படத்திற்கு விருது வழங்க இருப்பதாக தெரிந்தவுடன் அவர்களை சென்னைக்கு வரவழைத்து விழாவிற்கு அழைத்து வந்தேன். அதன் பிறகு தான் அவர்கள் என்னை முழுமையாக புரிந்து கொண்டார்கள். தொடர்ந்து போட்டிகளிலும் கலந்துகொண்டு என் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி வந்தேன். இதற்கிடையில் ஜோசப் ராஜா மீண்டும் என்னை தொடர்பு கொண்டு, இசைஞானி இளையராஜா கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சியில் என்னை உதவிக்கு அழைத்தார். அது எனக்கு புகைப்பட துறையில் நல்ல அனுபவத்தை ஏற்படுத்தியது’’ என்றவர் தன் கிராமத்து மக்களுக்காகவே புகைப்பட கண்காட்சியினை நிகழ்த்தியுள்ளார்.

‘‘நான் பல புகைப்படக் கண்காட்சியை பார்த்துள்ளேன், கலந்து கொண்டும் இருக்கேன். பல ஆயிரம் பேர் பார்க்கும் அந்த புகைப்படங்களை அதில் உள்ளவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். அதற்கான வாய்ப்பும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. என் கிராமத்து மக்களுக்கும் இதே நிலை தான். அவர்களை புகைப்படம் எடுத்து அதை நான் கண்காட்சியில் வைத்திருந்தாலும், அவர்களும் அதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. அதற்காகவே, என் கிராமத்தில் ஒரு கண்காட்சியினை நிகழ்த்தினேன்.

அதைப் பார்த்திட்டு, பலர் ‘நானா இது... நம்மூரா இவ்வளவு அழகா இருக்கு’ன்னு வியந்தனர். கடந்த இரண்டு வருடமாக, தங்கையின் திருமணம், அம்மாவுக்கு ஆபரேஷன் போன்ற காரணங்களால் கண்காட்சி நடத்த முடியவில்லை. இந்தாண்டு பொங்கல் பண்டிகையொட்டி ஏற்பாடு செய்திருந்த கண்காட்சியை ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன். கொல்கத்தா, மும்பை, சிங்கப்பூர், மலேசியா போன்ற பல இடங்களிலிருந்து வரவேற்பு கிடைத்தது. அடுத்து காசிமேடு, எண்ணூர் போன்ற இடங்களில் புகைப்படக் கண்காட்சியை அமைக்கும் முயற்சியில் இருக்கேன்’’ என்று கூறும் கபிலன் வாரத்தில் ஒரு நாள் தன் கேமராவிற்காக ஒதுக்கிவிடுகிறார்.

‘‘என் வேலை நேரம் போக ஞாயிற்றுக் கிழமையில் மட்டும்தான் போட்டோ எடுக்க நேரம் கிடைக்கும். அந்த ஒரு நாளுக்காக அந்த வாரம் முழுவதும் காத்திருந்து, கிடைக்கும் ஒரு நாள் விடுமுறையிலும் ஓய்வெடுக்காமல், காலை நான்கு மணிக்கு எழுந்து, நான் புகைப்படம் எடுக்க நினைக்கும் இடத்திற்குச் சென்றுவிடுவேன். சூரிய உதயத்தில் முதலில் இளஞ்சிவப்பு வண்ணத்தில் வானம் தோன்ற ஆரம்பிக்கும். அடுத்து மெல்ல மஞ்சள் நிறத்தில் சூரியன் மலரத்தொடங்கும். இதனால் காலை நான்கு மணிக்கே எழுந்து ஸ்பாட்டிற்கு போனால்தான் இந்த காட்சிகள் அனைத்தையுமே பதிவு செய்ய முடியும்.

கேமரா, என்னோட இன்னொரு இதயம். எங்கு போனாலும், யாரைப் பார்த்தாலும், என் ஊரை, என் மக்களைப் புகைப்பட கேமரா வழியாகவே பார்ப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படும். சாதாரணமாக ஒரு சூரிய உதயத்தை பார்ப்பதற்கும், அதை நிழற்படக் கண்ணில் பார்க்கும் போதும், அதற்குரிய ரசனையை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. எதிர்காலத்தில் சில அழுத்தமான புகைப்படங்கள் எடுத்து அதை ஆவணப்படமாக்க வேண்டும் என்ற திட்டத்தில் இருக்கிறேன்.

என் கிராமத்திலிருந்து நான் இன்று கடந்து வந்த பாதை ரொம்ப தூரம். என் கிராமத்து மக்களுக்கு கேமரா வாங்குவது என்பது நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆனால் அங்கேயும் ஆர்வமான குழந்தைகள் இருக்கிறார்கள். நான் தனியாக இருந்த சமயம், எனக்குக் கிடைத்த நல்ல வழிகாட்டுதலும், உதவிகளும்தான் இன்று நான் உருவாகக் காரணம்.

எனவே, அதே போல, என் ஊர் குழந்தைகளுக்கு என்றுமே ஒரு வழிகாட்டியாய் இருப்பேன். விரைவிலேயே அவர்களுக்கும் எப்படி புகைப்படம் எடுக்கணும்ன்னு சொல்லித் தருவேன். அதில் ஆர்வமானவர்களை தேர்வு செய்து, சிறப்புப் பயிற்சியும், வழிகாட்டுதலும் தர முடிவு செய்துள்ளேன்” என்றார் கபிலன்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : exhibition ,hometown ,
× RELATED ஜம்மு-காஷ்மீா் துலிப் மலர் கண்காட்சி புகைப்படங்களின் தொகுப்பு..!!