×

தி க்ரேட் இந்தியன் கிச்சன்

நன்றி குங்குமம் தோழி

பெயரைப் பார்த்ததும், ஏதோ நம் இந்திய உணவின் அறுசுவையைக் கூறும் மற்றொரு படம் என நினைக்க வேண்டாம். தினமும் நம் வீடுகளில் உருவாகும் உணவிற்குப் பின்னால் இருக்கும் அழுக்கையும், அரசியலையும் சொல்லும் படம்தான் ‘தி க்ரேட் இந்தியன் கிச்சன்’.

நீஸ்ட்ரீம் என்ற ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கும் இந்த மலையாள படத்தை இயக்கியவர், ஜோ பேபி. கடந்த சில நாட்களாக கேரளத்தையும் தாண்டி, நாடு முழுக்க விமர்சிக்கப்பட்ட படம். பெயரற்ற கதாபாத்திரங்கள் கொண்ட இப்படத்தில் கதாநாயகியாக நிமிஷா சஜயன், கதாநாயகனாக சூரஜ் வெஞ்சரமூடு நடித்துள்ளனர். புதிதாகத் திருமணமாகி கணவன் (சூரஜ்), மாமனார், மாமியாருடன் வசிக்க வருகிறாள் நிமிஷா. அங்கு அவள் சந்திக்கும் நெருக்கடிகள்தான் திரைப்படத்தின் கரு.

பொதுவாகவே பெண்களுக்கு எதிராக நிகழும் அநீதியை, தீவிரமான உடல் ரீதியான வன்முறையாகச் சித்தரிப்பதால், பல நவீன ஆண்கள் தங்களைத் தீர்க்கதரிசியாக நினைத்துக்கொண்டு ஆணாதிக்கத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நினைக்கிறார்கள். ஆனால் தி க்ரேட் இந்தியன் கிச்சனில், ஒவ்வொரு வீட்டிலும்  நிகழும் நுட்பமான வெளித்தெரியாத ஆதிக்க வாதமும், அதனால் பெண்களுக்கு ஏற்படும் மன அழுத்தமும் இயல்பான கதைக்களத்தில் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சாதாரணமாக நம் குடும்பங்களில் இருக்கும் பெண்களின் கதையைக் கூறும் எதார்த்தமான படம். திரையில் வரும் காட்சிகள், பார்வையாளர்கள் நிச்சயம் தங்களுடனோ அல்லது தங்களுக்கு நெருக்கமான பெண்களுடனோ எளிதில் தொடர்புப்படுத்திக் கொள்ளும்படியான வழக்கமான நிகழ்வுகளாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன.

திரைக்கதை பெரும்பாலும் சமையலறையிலேயே நகர்கிறது. பெண்கள் வீட்டு வேலை செய்துகொண்டே இருக்கின்றனர். ஆண்கள் யோகா செய்வது, பேப்பர் படிப்பது, மொபைலில் வீடியோ பார்ப்பது எனப் பொழுதுபோக்குடன் உடற்பயிற்சியும் செய்து தங்களை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கின்றனர்.

பெண்கள் அடுப்பறையில் வெந்து, ஒவ்வொரு  உணவாகச் சமைக்க, ஆண்கள் டைனிங் டேபிளில் அதை சுவைக்கிறார்கள். மீதமான எலும்புத் துண்டுகள், மென்று துப்பிய முருங்கைக்காய் தோல்களை மேசையில் போட்டு, எச்சில் தட்டையும் அப்படியே வைத்துவிட்டு கை கழுவி எழுகின்றனர். அவர்களுக்கடுத்து அதே மேசையில் ஆண்கள் விட்டுச் சென்ற குப்பைக்கு நடுவே பெண்கள் சாப்பிட வேண்டும். நிமிஷாவிற்கு இது அருவறுப்பாக இருந்தாலும், அவளது மாமியாருக்கு இது வழக்கமான நடைமுறையாக உள்ளது.

மாமனாருக்கு மிக்ஸியில் அரைத்த சட்னி பிடிக்காது, கைகளிலேயே தேங்காய் துருவி சட்னி அரைக்க வேண்டும். குக்கர் சாதம் பிடிக்காது. விறகடுப்பில் வெந்த சோறுதான் வேண்டும். இயந்திரத்தில் துணி துவைத்தால் பிடிக்காது. கையில் தான் துவைக்க வேண்டும். ஒவ்வொரு வேளையும் புதிதாகச் சமைத்த சூடான உணவுதான் வேண்டும். இப்படி பல கட்டளைகளையும், சிரித்த முகத்துடன் நாசுக்காக சொல்லிவிட்டு நகர்கிறார் மாமனார். கணவனோ சாப்பிட்ட டிபன் பாக்ஸில் இருக்கும் குப்பையைக் கூட கொட்டாமல், அப்படியே வீட்டிற்கு எடுத்து வருகிறான். மனைவிக்கு பாலியல் குறித்த புரிதல் இருப்பதை, “ஓ இதெல்லாம் முன்னாடியே உனக்கு தெரியுமா” எனக் குற்றம் சாட்டுகிறான்.

நிமிஷா வேலைக்கு விண்ணப்பிக்கட்டுமா எனக் கேட்க, ‘‘நீ வீட்டில் செய்யும் வேலை, கலெக்டர் - மந்திரிகளின் வேலையை விட பெரிசு. நீ இந்த வீட்டின் ஐஸ்வர்யம். நம் வீட்டுப் பெண்கள் வேலைக்கு போவது சரியா இருக்காது” என மாமனார் இனிமையாக பேசி மறுக்கிறார். இப்படி, இயக்குநர் ஜோ பேபி உருவாக்கியுள்ள ஆண் கதாபாத்திரங்கள், நேரடியாக வன்முறையைப் பயன்படுத்துபவர்களோ பெண்களைச் சித்திரவதை செய்பவர்களோ அல்ல.

ஆனால் உளவியல் ரீதியாக தங்கள் வீட்டுப் பெண்ணை பாசம், அக்கறை என்ற பெயரில் சமையலறைக்குள் மட்டுமே பூட்டி வைத்து ஆளும் ஆணாதிக்கவாதிகள். அதே போல, நிமிஷாவும் பெண்ணியம் பேசும் கதாபாத்திரம் அல்ல. வெளிநாட்டில் வளர்ந்ததால், இந்திய குடும்ப அமைப்பின் பழக்க-வழக்கங்கள் தெரியாத பெண்ணாக இருந்தாலும், திருமணமாகி போகும் வீட்டில் அவர்களுடன் அனுசரித்துப் போகவே அவள் விரும்புகிறாள். தியாகங்கள் செய்யவும் தயாராக இருக்கிறாள். செய்யாத தவறுக்கும் மன்னிப்பு கேட்டு, தன் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வாழ முயற்சிக்கும் சாதாரண பெண்ணாகவே இருக்கிறாள்.

அடுத்து முக்கியமாக இப்படத்தில் தோன்றும் மாமியார் கதாபாத்திரமும் நம் மனதில் நிற்கிறார். இவர், தன் வீட்டிலும், சமுதாயத்திலும் இருக்கும் ஆணாதிக்க அமைப்பை உணர்ந்தவர். அந்த அமைப்பு தனக்கு நெருடலாக இருந்தாலும், தினமும் காலையில் தன் கணவருக்கு ப்ரஷில் பேஸ்ட் வைத்துக் கையில் கொடுப்பது, கணவர் வெளியில் செல்லும் போது காலில் செருப்பை மாட்டிவிடுவது என்று கணவரின் சந்தோஷத்துக்காகவே வாழ்கிறார். ஓயாது குடும்பத்திற்காக வேலை செய்தாலும், அவரது உழைப்பை யாரும் அங்கீகரிப்பதில்லை.

இந்த நெருக்கடியிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அவர் முற்படவில்லை. ஆணாதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்காமல் தொடர்ந்து தன் கணவனுக்கும் மகனுக்கும் சேவை செய்து வந்தாலும், புதிதாக வந்த மருமகளிடம் ரகசியமாக தன் ஆதரவு கரங்களை நீட்டி, நட்பு பாராட்ட முயல்கிறார். தனக்கு கிடைக்காத வாய்ப்பும், விடுதலையும் தன் மருமகளுக்கு கிடைக்கட்டும் என நினைக்கும் அன்பு நிறைந்தவராக இருக்கிறார்.

இயக்குனர், தான் சொல்ல நினைக்கும் கருத்தை, நீண்ட உரையாடல்களாக நம் மீது திணிக்காமல், இயல்பான காட்சிகள் வழியாகவும், நடிகை நிமிஷாவின் பாவனைகள் வாயிலாகவும் தெளிவாக வெளிப்படுத்திவிடுகிறார். சமையலறை காட்சிகள் பார்வையாளர்களை சோர்வூட்டும் விதத்தில், வீட்டில் பெண்கள் செய்யும் வேலையில் இருக்கும் சலிப்புத்தன்மையை பறைசாற்றும் விதமாக அமைத்திருக்கிறார்.  

பொழுதுபோக்கிற்காக விரும்பி என்றோ ஒரு நாள் சமைப்பதையும், தினமும் சமைத்து, பாத்திரங்கள் கழுவி சமையலறையை சுத்தம் செய்வதில் இருக்கும் வேறுபாடுகளையும் தெளிவாகப் படக் குழுவினர் காட்சிப்படுத்தியுள்ளனர். வீட்டிலிருக்கும் ஆணாதிக்கத்தை மட்டும் சொல்லாமல்,  மூடநம்பிக்கை சார்ந்த பிரச்சனையையும் இதில் இணைத்துள்ளனர்.சூரஜ் எஸ். குருப்பின் மெல்லிய இசையில், சல்லு கே தாமஸ்ஸின் கேமராவில்,பிரான்சிஸ் லூயிஸ் துல்லியமான எடிட்டிங்கில் தி க்ரேட் இந்தியன் கிச்சனின் திரைக்கதை விரிகிறது.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்

Tags : Great Indian Kitchen ,
× RELATED கோவா பட விழாவில் மம்மூட்டி, ஜோதிகா படம்