பெண் மைய சினிமா -மாஃபியா கும்பலிடம் மாட்டிக்கொண்ட பாடகி!

நன்றி குங்குமம் தோழி

பாலியல் தொழிலில் இளம் பெண்களை ஈடுபடுத்தி கோடிகளை அள்ளும் மாஃபியா கும்பல்கள் பெருகிவிட்டன. இதற்காகவே பெண்கள் கடத்தப்படுகின்றனர். மாஃபியா  கும்பலிடம்  மாட்டிக்கொண்ட ஆயிரம் பெண்களில் ஒருவர் தப்பித்து வெளியேறுவதே ஆச்சர்யம். இப்படி ரஷ்ய மாஃபியாவிடம் மாட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ஓர் இளம் பெண்ணின் கதைதான் ‘த ஈக்வலைசர்’.

அறுபது வயதை நெருங்கும் ராபர்ட் தன்னந்தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகிறார். ரொம்பவே அமைதியானவர். அவரைப் பற்றி யாருக்குமே அவ்வளவாக வெளியில் தெரியாது. வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு ஹோம் மார்ட் ஸ்டோரில் வேலை செய்து வருகிறார். உடன் வேலை செய்பவர்களுடன் நட்புடன் ஜாலியாக பழகுகிறார். அதனால் வேலை பார்க்கும் இடத்தில் அவருக்கு நண்பர்கள் அதிகம்.

வேலை முடிந்து மாலையில் வீட்டுக்குத் திரும்பியதும் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்துவிடுவார். இரவானதும் கையில் புத்தகத்துடன் அருகிலிருக்கும் காபிக் கடைக்குப் போவார். அங்கே தேநீர் அருந்திக்கொண்டே புத்தகத்தை வாசிப்பார். இப்படித்தான் ராபர்ட்டின் அன்றாட நாட்கள் நகர்கிறது.

ராபர்ட்டைப் போலவே அந்தக் காபிக் கடைக்கு அலினா என்ற ஓர் இளம்பெண் தினமும் வருவாள். அவளும் தன்னை யார் என்று  வெளிக்காட்டிக் கொள்வதில்லை. தன்னுடைய பெயரைக் கூட பொய்யாக சொல்கிறாள். கையில் புத்தகத்துடன் இருக்கும் ராபர்ட்டை அவளுக்குப் பிடித்து போய்விடுகிறது. தானாகவே வந்து ராபர்ட்டிடம் பேசுகிறாள். விரைவிலேயே அவளுக்கும் ராபர்ட்டுக்கும் இடையில் நல்ல நட்பு உருவாகிறது.

ஒரு காலத்தில் நல்ல பாடகியாக இருந்தவள் அலினா. ஆனால், அமெரிக்க மாஃபியா கும்பலால் கடத்தப்பட்டு, வலுகட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறாள். வாடிக்கையாளர்கள் இல்லாதபோது ரிலாக்ஸ் செய்வதற்காக காபிக்கடைக்கு வந்திருக்கிறாள். அமெரிக்காவிலிருக்கும் அந்த மாஃபியா கும்பலை ரஷ்யாவில் இருந்துகொண்டே வழி நடத்துகிறார் புஷ்கின்.

தினமும் காபிக் கடைக்கு வரும் அலினாவை இரண்டு, மூன்று நாட்களாக காணவில்லை. அலினாவுக்கு என்ன ஆனதோ என்று பதறிப்போகிறார் ராபர்ட். அலினாவைத் தேடிப்போகிறார். வாடிக்கையாளரிடம் சரியாக நடந்து கொள்ளாததால் மாஃபியா கும்பல் தலைவனால் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறாள் அலினா. மருத்துவமனைக்கு விரைந்து சென்று அலினாவுக்கு என்ன நடந்தது என்று அறிகிறார் ராபர்ட். உடனே மாஃபியா கும்பலைச் சந்தித்து ஒரு தொகையைக் கொடுத்து அலினாவை சுதந்திரமாக விடும்படி கோரிக்கை வைக்கிறார் ராபர்ட்.

வயதான ராபர்ட்டை கேலி செய்து அவரின் கோரிக்கையை நிராகரிக்கிறான் கும்பலின் தலைவன். விஸ்வரூபம் எடுக்கும் ராபர்ட் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருக்கும் கும்பலின் தலைவன் உட்பட நான்கு பேரை கொன்று குவிக்கிறார். ராபர்ட்டை பழிவாங்க, கொலை செய்வதில் வல்லவனான டெடியை  அமெரிக்காவுக்கு அனுப்புகிறார் புஷ்கின். ஒன்றிரண்டு நாளில் அனைத்து மாஃபியா வேலைகளையும் புஷ்கின் விட்டுவிட வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு என்று டெடியிடம் கட்டளையிடுகிறார் ராபர்ட். ஆடிப்போகிறான் டெடி. உண்மையில் ராபர்ட் யார்? அவர் எப்படி மாஃபியா கும்பலை பந்தாடுகிறார்? அலினா என்ன ஆனாள்... என்பதே அட்டகாசமான திரைக்கதை.

வெறுமனே ஆக்‌ஷன் படம் என்று கடந்துபோக முடியாத ஒரு படம் இது. பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களின் வலியையும், நிராதரவையும் அருமையாக பதிவு செய்கிறது திரைக்கதை. இப்படியான கதையம்சம் கொண்ட படங்கள் ஏராளமாக வந்திருந்தாலும் ஆக்‌ஷன் காட்சிகளால் தனித்து நிற்கிறது இந்தப் படம். குறிப்பாக நேரத்தை செட் செய்துவிட்டு அதற்குள் எதிரிகளைப் ராபர்ட் பந்தாடுவது எல்லாம் புதிது. அமைதியாகவும் அதிரடியாகவும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார் ராபர்ட்டாக நடித்த டென்செல் வாசிங்டன். படத்தின் இயக்குநர் அன்டோய்ன் புகுவா.இன்னமும் மாஃபியா கும்பலின் அட்டூழியங்களும் பாலியல் தொழிலும் குறைந்தபாடில்லை என்பதுதான் சோகம்.

தொகுப்பு: த.சக்திவேல்

படங்கள்: ஜி.சிவக்குமார்

>