×

விரிஞ்சிபுரம் பாலாற்று பாலம் வெள்ளத்தில் அடித்து சென்றதால் உயர்மட்ட பாலம் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வேலூர்: விரிஞ்சிபுரம் பாலாற்று பாலம் வெள்ளத்தில் அடித்து சென்றதால் உயர்மட்ட பாலம் பணிகள் தொடங்குவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக- ஆந்திராவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையால் பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. மேலும் ஏரிகள், குளங்கள், ஆறுகளிலும் பெருக்கெடுத்து ஓடியது. குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் கரைபுரண்டு சென்றது. பாலாற்றில் ஒரு லட்சம் கனஅடி வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கே.வி.குப்பம் அருகே உள்ள வட விரிஞ்சிபுரம் காமராஜபுரத்தில் பாலாற்றங்கரை ஓரத்தில் வெள்ளப்பெருக்கு அதிகளவில் ஏற்பட்டது.

இதில் ஆற்றங்கரையோரம் கட்டப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட வீடுகள் மண் அரிப்பால் அடுத்தடுத்து சரிந்து ஆற்றுக்குள் விழுந்தன. மேலும் விரிஞ்சிபுரம்- வடுகன்தாங்கல் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் தரைப்பாலம் 322 மீட்டர் நீளம் கொண்டது. இதில் 80 மீட்டர் அளவுக்கு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் ஓரிரு மாதங்களுக்கு முன்பு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ரூ.30 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் தற்போது காட்பாடி ரயில்வே மேம்பாலம் பணிகள் நடந்து வருவதால் ஆந்திராவில் வேலூர் வழியாக செல்லும் திருவண்ணமாலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு செல்லும் கனர வாகனங்கள் அனைத்தும் விரிஞ்சிபுரம் தரைப்பாலம் வழியாக இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்துநெரிசல் ஏற்பட்டுள்ளது. அதிகளவில் வாகனங்கள் வருவதால் தற்காலிக தரைப்பாலம் வலு இழுந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
காட்பாடி ரயில்வே மேம்பாலம் சீர்செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனால் விரிஞ்சிபுரம் தரைப்பாலம் வழியாக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளது. குறிப்பாக வேலூரில் இருந்து கே.வி.குப்பம், குடியாத்தம் செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் அதிகளவில் வருகிறது. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தரைப்பாலத்தின் ஒரு பகுதி தற்காலிகமாக சீர் செய்யப்பட்டுள்ளது.

இதனால் அந்த வழியாக வாகனங்கள் அதிகளவில் வந்து செல்லுவதால் பழுது ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. உயர்மட்டப் பாலம் அமைக்கப்பட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பணிகளை விரைவுப்படுத்த வேண்டும். வரும் மாதங்களில் மழை பெய்தால் இந்த தற்காலிக தரைப்பாலம் கூட இருக்குமா என்பது சந்தேகம் தான். எனவே பொதுமக்களின் போக்குவரத்து பயன்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Sangchipuram Palatra Bridge , Virinjipuram Milky Way Bridge, High Bridge Work, Public Request
× RELATED விரிஞ்சிபுரம் பாலாற்று பாலம்...