×

முறையான பராமரிப்பு இன்றி இடிந்துவிழும் அபாயம் பாளை. சாந்திநகரில் காட்சிப் பொருளாக மாறிய மணிக்கூண்டு

*பழமை மாறாமல் சீரமைத்து பாதுகாக்கப்படுமா?

நெல்லை : பாளையங்கோட்டை சாந்திநகரின் அடையாளமான மணிக்கூண்டு முறையான பராமரிப்பின்றி பாழானதோடு தற்போது முற்றிலும் சேதமடைந்து இடிந்துவிழும் அபாயத்தில் காணப்படுகிறது. எனவே, அவதிக்கு உள்ளாகும் அப்பகுதி மக்கள், பழமைமாறாமல் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா? என எதிர்பார்க்கின்றனர்.
நெல்லை மாநகராட்சி பாளை மண்டலத்துக்கு உட்பட்டது சாந்திநகர். இந்நகரின் மையப்பகுதியில் உள்ள மணிக்கூண்டானது சாந்திநகர் பகுதியின் அடையாளமாக நேரம் காட்டும் கடிகாரத்துடன் கம்பீரமாகக் காணப்பட்டு வந்தது.

ஆனால், முறையான பராமரிப்பின்றி பாழாகத் துவங்கியது. குறிப்பாக மருந்துக்குக்கூட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாத காரணத்தால் தற்போது இந்த மணிக்கூண்டில் கடிகாரம் இல்லை என்பதுடன் மணிக்கூண்டும் முற்றிலும் சிதிலமடைந்து எந்நேரத்தில் இடிந்துவிழும் அபாய நிலைக்கு மாறியுள்ளதாக பொதுமக்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மேலும் கூறுகையில் ‘‘கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சாந்திநகர், திம்மராஜபுரம், கோட்டூர் பகுதிகளைச் சேர்ந்த அனைத்துத்தரப்பினரும் இப்பகுதியை கடக்கும் போது இங்கு கம்பீரத்துடன் காட்சியளித்த மணிக்கூண்டை ஏறிட்டு பார்க்க தவறியதில்லை. அரசு, தனியார் நிறுவன பணியாளர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ- மாணவிகள், பல்வேறு பணி நிமித்தம் மாநகர பகுதிகளுக்கு செல்வோர் என பல்வேறு தரப்பினரும் பஸ்சின் வருகைக்காக காத்து நிற்கும் போதும் மணிக்கூண்டில் காணப்படும் கடிகாரத்தை கவனித்து பயணத்தை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், கடந்த பல ஆண்டுகளாக மணிக்கூண்டு முறையாகப் பராமரிக்கப்படவில்லை. மருந்துக்குக்கூட பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படாத காரணத்தால் தற்போது முற்றிலும் சேதமடைந்து காட்சிப் பொருளாகவே மாறிவிட்டது. அத்துடன் கடிகாரம் எதுவும் இல்லாமல் வெறும் கூண்டு மட்டுமே அதுவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. மேலும் இது எப்போது வேண்டுமானாலும் சரிந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது.

சாந்திநகர் மணிக்கூடண்டு பகுதியில் இருந்து சீவலப்பேரி செல்லும் சாலை நான்கு வழிச்சாலை பாலம் வரை தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மணிக்கூண்டை மட்டும் பராமரிக்காமல் விடப்பட்டுள்ளது ஏனோ திருஷ்டி கழிப்பது போன்று உள்ளது.

தற்போது வாட்ச் மற்றும் செல்போன்கள் வந்துவிட்டதால் மணிக்கூண்டின் அவசியம் தற்போது தேவையில்லைதான். ஆனாலும் பாளை சாந்திநகர், திம்மராஜபுரம், கோட்டூர் பகுதிகளுக்கு அடையாளமாக திகழ்ந்த மணிக்கூண்டை நகர் அழகுப்படுத்தும் திட்டத்தின் கீழ் பழமை மாறாமல் சீரமைத்து முறையாக பராமரித்து பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வருவார்களா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

The post முறையான பராமரிப்பு இன்றி இடிந்துவிழும் அபாயம் பாளை. சாந்திநகரில் காட்சிப் பொருளாக மாறிய மணிக்கூண்டு appeared first on Dinakaran.

Tags : Shantinagar ,Nellai ,Palayamgottai Shantinagar ,Palai ,
× RELATED ஜெயக்குமார் மரணம் தொடர்பாக நெல்லை...