×

ஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது

அழகுப் பெட்டகம் 9

ஒவ்வாமை என்பதே உடல் தன் உள் உறுப்புக்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றும் ஒருவித நடவடிக்கைதான். மனிதனுக்கு பலவிதங்களில் ஒவ்வாமை ஏற்படுகிறது. நமக்கு ஒரு விசயம் பிடிக்கவில்லை அதைச் செய்யாமல் இருப்பதுதானே நல்லது. நமது உடல் ஏற்றுக்கொள்ளாத ஒன்றை வலிந்து திணிக்கும்போது இயற்கைக்கு மாறான எதிர்வினைகளையும் எதிர்கொள்ளத்தானே வேண்டும். ஒவ்வாமை என்பது இதனால் மட்டும்தான் வருகிறது என்று, குறிப்பிட்டு சொல்ல முடியாது. தூய்மை சீர்கேட்டினால் ஏற்படும் மாசு மூலமாகவும் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும்.

விளைவு தும்மல், மூச்சுத் திணறல், இருமல், மூக்கில் இருந்து தொடர்ந்து நீர் வழிதல் போன்றவை தோன்றும். தோலில் தோன்றும் ஒவ்வாமையே ஸ்கின் அலர்ஜி என்கிறோம். நம் உடலுக்கு ஒத்துக்கொள்ளாத சிலவகையான உணவுகளை உட்கொள்வதன் மூலமாகவும் தோலில் ஒவ்வாமை ஏற்படும். உணவு மூலமாக ஏற்படும் ஒவ்வாமையினை சட்டெனத் தோல் காட்டிக் கொடுத்துவிடும். சிலருக்கு தலையில் அதிகமாக இருக்கும் பேன் மற்றும் பொடுகுத் தொல்லை காரணமாக ஒவ்வாமை தோன்றி, கண் எரிச்சல், நமச்சல் போன்றவை ஏற்படும்.

குளிக்கப் பயன்படுத்தும் சோப்பை மாற்றி மாற்றி பயன்படுத்துவதினாலும் சிலருக்கு அலர்ஜி உண்டாகும். துணிக்கு பயன்படுத்தும் சோப்பு பவுடர்கள், பாத்திரம் சுத்தம் செய்ய பயன்படுத்தும் லிக்யுட் க்ளீனர்ஸ், குளியலறை, கழிப்பறைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் தயாரிப்புகளால் கூட பலருக்கும் கைகளில் உள்ள தோலில் அலர்ஜி ஏற்படும். உடல் உபாதைகளுக்காக மருந்து மாத்திரைகளை தொடர்ந்து அதிகமாக எடுப்பவர்களுக்கு அவர்கள் எடுக்கும் மருந்துகள் மூலமாகவும், ஒவ்வாமை தோன்றும்.

தோலில் தோன்றும் தேமலும் ஒருவிதமான ஒவ்வாமைதான். தூசி மூக்கில் நுழையும்போது தொடர்ந்து ஏற்படும் தும்மல், இருமல், கண்களில் இருந்து நீர் வழிதல், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, இவையெல்லாம் உடலில் உள்ள கழிவை வெளியேற்றும் நிகழ்வு. நமது உடல் கழிவை வெளியேற்ற வழி தராமல், மருந்து மாத்திரைகளை உண்டு தடுப்பதன் மூலம் கழிவுகள் வெளியேறுவதற்கான வழிகளை அடைத்து வைக்கிறோம். இதனால் உடலில் உள்ள கழிவு வெளியேற்றப்படாமல் அப்படியே உடலுக்குள்ளேயே தங்கிவிடுகிறது. விளைவு சருமத்தில் ஒவ்வாமை ஏற்படுகிறது.

குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சி நிறைய இருந்தால், பூச்சியின் கழிவுகள் உடலுக்குள் தங்கும். அந்தக் கழிவுகளை வெளியேற்றும் வேலையினை உடல் தானாகவே செய்யத் துவங்கும். உடல் செய்யும் வேலையினை செய்ய விடாமல் நாம் அதைத் தடுப்பதற்கான வேலைகளைச் செய்யும்போது எதிர்வினை ஏற்பட்டு தோல் அலர்ஜி அடைகிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில், பெண்கள் அழகை வெளிப்படுத்த தீவிரம் காட்டும் அழகுசாதனப் பொருட்களும், சில வகையான உலோக அணிகலன்களாலும் தோலில் ஒவ்வாமை தோன்றும். ஒருவருக்கு ஒவ்வாமை இருப்பின், 12 மணி நேரம் முதல் 48 மணி நேரத்துக்குள் அதன் விளைவு தோல்களில் தெரியத் துவங்கும்.

இந்த வாரம் பெண்கள் அணியும் ஆபரணங்களால் வரும் அலர்ஜி குறித்து விளக்கமாகப் பார்க்கப் போகிறோம். ஆபரணங்களினால் உண்டாகும் ஒவ்வாமை என்பது ஆண்களுக்கு 7 முதல் 15 சதவிகிதமும், பெண்களுக்கு 26 முதல் 36 சதவிகிதமும் வருகிறது. இதனை நிக்கிள் அலர்ஜி (NICKEL allergy) என்கின்றனர் மருத்துவர்கள். ஆபரணங்களால் வரும் ஒவ்வாமையை குறிக்கும் வார்த்தை “ஜுவல் அலர்ஜி”. தங்கம், வெள்ளி, பிளாட்டினம் மூலமாகச் சிலருக்கு தோலில் ஒவ்வாமை ஏற்படுகிறது. பெண் குழந்தையாக இருந்தால், மெட்டல்களில் அழகழகாக வரும் காதணிகளை மாற்றி மாற்றி வாங்கி அணிவித்து, குழந்தையினை அழகு பார்க்கிறோம்.

இது சில குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாமல் தோலில் ஒவ்வாமையினை ஏற்படுத்தும். விளைவு, புதிதாய் குத்திய காதின் துளைகள் புண்ணாகி குழந்தைக்கு அந்த துளை வழியாக சீல் பிடிக்கத் துவங்கும். இதற்கு ஒரே வழி காதின் துளைகளில் வேப்பங் குச்சியை சிறிதாக ஒடித்து சொறுகி வைத்துவிட்டு அந்த இடத்தில் நல்லெண்ணெய் கொண்டு புண்ணை ஆற்ற வேண்டும். விளக்கெண்ணெயினை சிறிது குழந்தைக்கு குடிக்கக் கொடுக்கலாம். இது விரைவில் புண்ணை ஆற்றிவிடும்.
பெண்கள் அணியும் பெரும்பாலான அணிகலன்கள் மற்றும் ஜாக்கெட், உள்ளாடைகளில் உள்ள கொக்கி, வளையம் போன்றவற்றை உடலோடு ஒட்டி அணியும்போது அவை தோல்களில் பட்டு ஒவ்வாமையினை உண்டுபண்ணுகிறது.

இதுவே மெட்டல் அலர்ஜி என்று அழைக்கப்படுகிறது. கைபேசியினைச் சுற்றியுள்ள மெட்டல், கண்களில் அணியும் கண்ணாடியைச் சுற்றியுள்ள மெட்டல் பிரேம், காசுகள், கீ செயின், ஆண்களின் கால் சட்டை மற்றும் பெண்களின் மேலாடைகளில் உள்ள ஜிப், சிலவகைக் காலணிகளில் உள்ள மெட்டல்களாலும் தோலிற்கு ஒவ்வாமை உண்டாக வாய்ப்புகள் அதிகம்.தோலில் சற்றே நமச்சல் அல்லது தொடர்ந்து அரிப்பு ஏற்பட்டால் அது ஒவ்வாமையின் அறிகுறி. தோலில் அரிப்பு ஏற்பட, நாம் நம்மை அறியாமலே அந்த இடத்தை சொரிந்துவிடுவோம். அப்போது தோல் இயல்பாகவே சிவந்து, தடித்து, வறண்டு, வரிவரியாகப் பிளவு ஏற்பட்டு உரியத் துவங்கும். சிலருக்கு சிறிய கொப்பளங்கள் ஏற்பட்டு, அந்த இடம் சீல் பிடிக்கத் துவங்கும்.

எதைப் பயன்படுத்தினால் உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லையோ, அதை முற்றிலும் தவிர்த்தல் நல்லது மற்றும் சரும நிபுணரை அணுகுவது நல்லது.
விதவிதமான டிசைன்களில் வரும் அணிகலன்களை எனக்கு அணிய விருப்பம். ஆனால் எனக்கு தோல் அலர்ஜி இருக்கிறது? என்ன செய்வது எனப் புலம்புபவர்களா நீங்கள்? ஆர்டிபிஸியல் நகைகளை அணிய விரும்புவர்கள் 14, 18, 22 காரட் மஞ்சள் வண்ண கோல்ட் அணிகலன்களை வாங்கி பயன்படுத்தலாம். இல்லையெனில் அணிகலன்களின் தோலில் படும் பகுதிகளை டிரான்ஸ்பரன்ட் நெயில்பாலிஸ்களைக் கொண்டு ஒரு மேல் பூச்சு ஒன்றைப் பூசி அணியலாம். டிரான்பரன்ட் நெயில் பாலிஸ் என்பது வண்ணங்கள் இன்றி தண்ணீரை போன்ற தன்மையில் இருப்பதால், அதன் வண்ணம் மெட்டலில் வெளிப்படாது, நம் சருமத்திற்கும் பாதுகாப்பு.

பிளாஸ்டிக்கினால் தயாரான அணிகலன்கள், நூலில் தயாரான ஆபரணங்கள், காகித அணிகலன்களை வாங்கிப் பயன்படுத்தலாம். உள்ளாடைகளில் கூட பிளாஸ்டிக் கொக்கிகள், வளையங்கள் கொண்டு தயாரான உடைகளை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக், டைட்டானியம், சில்வர், காப்பர், பிளாட்டினம் போன்ற உலோகங்களில் தயாரான அணிகலன்களால் ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பில்லை. வெள்ளி ஆபரணங்கள் உடலுக்கு குளிர்ச்சி தருகிறது. தங்க ஆபரணங்கள் மனித உடலில் உள்ள ஹார்மோன்களையும் சமப்படுத்துகிறது.

குழந்தைகளுக்கு சிறியதாகவும், வளர்ந்தவர்களுக்கு கொஞ்சம் பெரிய அளவிலும், வயதானவர்களுக்கு மிகப் பெரியதாகவும் காதணிகளை அணிவதன் அடிப்படை உண்மை என்பது, காது மடல்களைச் சுற்றி நம் மூளைக்குச் செல்லும் நரம்பு, மூளையினைத் தூண்டி, நமது உடம்பை எப்போதும் உற்சாகமாக வைத்துக்கொள்ளும். இதனாலே நமது முன்னோர்கள் காது வளர்த்து  தண்டட்டி, பாம்படம் போன்ற கனமான அணிகலன்களையும், காது மடல்களைச் சுற்றியும் விதவிதமான அணிகலன்களை அணிந்தும் மகிழ்ந்தனர்.

பெண்கள் மெட்டி அணியும் கால் விரல்களில் உள்ள நரம்புகள் கர்ப்பப் பையோடு தொடர்புப்படுகிறது. அதனால்தான் திருமணம் முடித்த பெண்ணிற்கு கால் விரல்களில் முன்னோர்கள் வெள்ளியால் செய்யப்பட்ட மெட்டிகளை அணிவித்தார்கள். இரண்டு விரலுக்கும் இடைப்பட்ட பகுதி இறுக்கமாகவும், குளிர்ச்சியாகவும் இருந்தால் கர்ப்பப்பைக்கு மிகவும் நல்லது. பெண்களுக்கு மெட்டி அணிவிக்கப்பட்ட நோக்கம் இதுவே.

இனிவரும் கேள்விக்கான பதில்கள் அடுத்த வாரம்…

* முகப்பரு, முகப்பரு மூலம் முகத்தில் ஏற்படும் தழும்பு, மங்கு, கரும்புள்ளி, இதெல்லாம் எதனால் தோலில் வருகிறது?
* மேற்குறிப்பிட்ட பிரச்னைகளில் இருந்து எவ்வாறு விடுபடுவது?

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!