சிவனுக்கு உகந்த ஆருத்ரா நோன்பு!

மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நோன்பு, திருவாதிரை நட்சத்திரம் கூடிய நிறைமதி நாளில் உபவாசம் இருந்து கடைப்பிடிக்கும் நோன்பு. அன்று களி செய்து இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படுகிறது. சிதம்பரத்தில் சேந்தனார் என்ற சிவ பக்தர் விறகுகளை வெட்டி அதனை விற்று வாழ்ந்து வந்தார். தினமும் சிவனடியாருக்கு உணவளித்துப் பின் தான் சாப்பிடுவதை வழக்கமாக கொண்டவர்.

ஒரு நாள் மழை காரணமாக விறகுகள் ஈரமாயின. அவரால் விற்க முடியவில்லை. அரிசி வாங்க காசில்லாததால், களி மற்றும் காய்கறி கூட்டு செய்து சிவனடியாருக்காக காத்திருந்தார். யாரும் வராத நிலையில் சிவபெருமானே சிவனடியார் வேடம் பூண்டு களி உண்டு மகிழ்ந்தார். மறுநாள் காலை  கோயில் கருவறையைத் திறந்த போது, அங்கு நடராஜப் பெருமானைச் சுற்றி எங்கும் களி சிதறிக் கிடந்ததைப் பார்த்து மன்னனிடம் புகார் கூறினர்.

சிவபெருமான்அனைத்தும் தமது திருவிளையாடலே என்பதை மன்னருக்கு தெளிவுபடுத்தி அருள்பாலித்தார். இது நிகழ்ந்தது ஒரு திருவாதிரை புண்ணிய தினம் என்பதால், அன்றைய தினத்தில் திருவாதிரைக் களி தில்லைநடராஜர் கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இம்மாதம் 30ம் தேதி ஆருத்ரா நோன்பு கடைப்பிடிக்கபடுகிறது.

திருவாதிரைக்களி

தேவையான பொருட்கள்

பச்சரிசி - 200 கிராம்,

பாசிப்பருப்பு - 50 கிராம்,

வெல்லம் - 150 கிராம்,

தேங்காய் - 1 மூடி,

முந்திரி - 10,

ஏலக்காய்ப்பொடி - 1,  

டீஸ்பூன்,

நெய் - 4 டீஸ்பூன்.

செய்முறை

அரிசி, பருப்பு இரண்டையும் வெறும் வாணலியில் சிவக்க வறுத்து ரவை போல அரைத்துக் கொள்ளவும்.  அடுப்பில் வாணலியை வைத்து தேவையான தண்ணீர் வைத்து வெல்லத்தைப் பாகு காய்ச்ச வேண்டும். மாவை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைக்கவும். தேங்காயை துருவி நெய்யில் வறுத்து தனியே வைக்கவும். முந்திரியையும் வறுத்து தனியே வைக்கவும். வெந்த மாவில் வறுத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி மற்றும் வெல்லப்பாகு, ஏலப்பொடி சேர்த்து நெய் விட்டு கிளறி கீழே இறக்க வேண்டும்.

Related Stories:

>