×

ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் முன்கூட்டியே விடுதலை செய்ய கோரிய நளினியின் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  அரசு அனுப்பிய தீர்மானத்தில் ஆளுனர் தாமதிப்பதால், அவரது ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நளினி தடா சட்டப்பிரிவில் தண்டிக்கப்பட்டாரா என்பதை தெரிந்து கொள்வதற்காக சிறப்பு நீதிமன்றத்தின் அசல் தீர்ப்பை சமர்ப்பிக்க தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் நேற்று  விசாரணைக்கு வந்தது. அப்போது சிறப்பு நீதிமன்ற தீர்ப்பு சமர்ப்பிக்கப்பட்டது.  

அப்போது, நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், அமைச்சரவை தீர்மானத்தின் அடிப்படையில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருந்ததும், இரண்டரை ஆண்டுகளுக்கு பின் அமைச்சரவை பரிந்துரையை குடியரசு தலைவருக்கு அனுப்பியதும் அரசியல் சாசனத்துக்கு விரோதமானது. அரசியல் சாசனத்துக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் உயர் நீதிமன்றம் அதை சட்டவிரோதம் என அறிவிக்கலாம் என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம் போல், விடுதலை செய்வது தொடர்பாக உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. அதற்கு உச்ச நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என்றார்.

அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், விடுதலை செய்யக் கோரவில்லை. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் விடுதலை செய்யும்படி அரசுக்கு உத்தரவிட தான் கோருகிறோம். அநீதியை அழிக்க உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கலாம். குடியரசு தலைவர் ஆவணங்களை ஆளுநர் அனுப்பவில்லை. அனுப்பினாலும் அவருக்கு உத்தரவிட முடியாது என்பதால் நளினியை விடுதலை செய்யும்படி மாநில அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றார். தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018ல் அமைச்சரவை ஆளுனருக்கு பரிந்துரைத்தது. ஆளுநரின் அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரின் கையெழுத்து அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கில் உயர் நீதிமன்றமே பரிசீலிக்கலாம் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

* முருகனுக்கு பரோல் கோரிய மனு வாபஸ்
ராஜீவ் கொலை வழக்கு ஆயுள் கைதி முருகனுக்கு பரோல் கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, பரோல் வழங்கக் கோரிய வழக்கை நளினி வாபஸ் பெற்றார். இதை ஏற்ற நீதிபதிகள், மனுவை வாபஸ் பெற அனுமதித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags : Nalini ,Governor ,Chennai iCourt , Postponement of judgment in Nalini's case seeking early release without waiting for Governor's approval: Chennai iCourt order
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...