×

இறால் பானிபூரி டக்கீடோ... செட்டிநாடு மட்டன் பரிட்டோ

நன்றி குங்குமம் தோழி

பொதுவாகவே, சமையல் செய்வது பெண்களின்  வேலை என்று கூறப்பட்டாலும், லாபம் தரும் நட்சத்திர உணவகங்களில் ஆண்களே பெரும்பாலும் பணிபுரிகின்றனர். காரணம் இதுபோன்ற அழுத்தம் நிறைந்த சூழலில் பெண்களால் வேலை செய்ய முடியாது என்ற பிம்பம் கட்டமைக்கப்பட்டுவிட்டது. சமையல் கலை பயிலும் மாணவிகளும் கூட பேக்கிங், குக்கீஸ் போன்ற உணவுத் தயாரிப்பில்தான் அதிகம் ஈடுபடுகின்றனர். வேகமாக விற்பனையாகும் தினசரி உணவு தயாரிப்பில் பெண்களின் பங்கு குறைவாகவே  இருக்கிறது. பெரிய உணவகச் சமையலறைகளில் அதீத உடலுழைப்பு தேவைப்படுவதால் பெண்கள் அதைச் செய்ய முடியாது என்கின்றனர்.

ஆனால் ஹில்டன், தாஜ் எனத் துபாயிலும், இந்தியாவில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் பணியாற்றி இப்போது சென்னைக்குத் திரும்பி ஹோம் குக்காக அவதாரம் பூண்டிருக்கிறார் காவியா வர்கீஸ்.காவ்யா எட்டு வயதில் பால், முட்டை, சாக்லெட்டுடன் சில காய்கறி வகைகளை சாப்பிட முடியாமல்,  உடல் நலத்தை பாதிக்கும் அலர்ஜி உண்டாவதை உணர்ந்தார். இதனால், பாட்டியின் உதவியுடன் அந்த வயதிலேயே தன் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவைத் தானாகவே சமைக்க ஆரம்பித்தார். அப்படி ஆரம்பித்தது தான் இந்த சமையல் மீதான ஆர்வம்.

‘‘துபாயில் நட்சத்திர ஹோட்டலில் பணியாற்றினாலும், சுயமாக ஒரு உணவகத்தை ஆரம்பிக்கும் ஆர்வம் எப்போதுமே எனக்குள் இருந்தது. இதனால், பிப்ரவரியில் இந்தியா திரும்பி வந்து, ஒரு சிறிய உணவகத்தை ஆரம்பிக்க முடிவு செய்தேன். ஆனால் அந்த நேரம் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவிட்டது. இருந்தாலும், இந்த நேரத்தில் புதிய உணவு வகைகளை உருவாக்கும் முயற்சியில் இறங்கினேன். சென்னையில் பட்ஜெட் மெக்ஸிகன் உணவு வகைகள் குறைவுதான். இதனால் பலரும் மெக்ஸிகோ உணவு வகையை இதற்கு முன் சுவைத்தது இல்லை.

முதன்முறையாக மெக்ஸிகன் உணவு வகைகளைச் சமைத்த போது, நண்பர்களும் குடும்பத்தினரும், இன்னும் அதிக காரம் வேண்டும் சுவை வேண்டுமென்று கூறினார்கள் அவர்களுக்கு இந்த உணவு வகை அந்நியமாகவே இருந்தது. இதனால் நமக்கு பழக்கப்பட்ட இந்திய உணவுகளில் மெக்சிகன் சுவையைச் சேர்த்து புதிய உணவு வகைகளைத் தயாரிக்க ஆரம்பித்தேன். ‘மெக்ஸ் இட் அப்’ (Mex it up), சென்னையின் முதல் மெக்சி- இந்திய உணவு கலவையாகும்” என்கிறார் இந்த லாக்டவுன் பிஸினஸ் செஃப்.  

காவியா  உருவாக்கிய அலப்பினோ சீஸ் சமோசா அறிமுகமான முன்றே மாதத்தில் 1500க்கும் அதிகமாக விற்பனையாகியுள்ளது. பரிட்டோ, மெக்ஸிகோவின் புகழ்பெற்ற உணவு வகை. நம்மூர் சப்பாத்தி போல இருக்கும் டார்டியாவை, சிறுதானியங்களைக் கொண்டு தயாரித்து, சுவையான அரிசியுடன்  பீன்ஸ், வெங்காயம், ஜலபீனோ, சீஸ் சேர்த்து, அதனுடன் பனீர்/ வறுத்த உருளைக்கிழங்கு/ சிக்கன் 65 அல்லது செட்டிநாடு மட்டனுடன் வேகவைத்து நம் மக்களின் சுவைக்கு ஏற்ப தயாரித்துள்ளார் காவியா.

இது ருசியுடன் ஆரோக்கியமானதாகவும் இருப்பதால், வாடிக்கையாளர்களின் ஃபேவரைட் உணவாகியுள்ளது. இதே போல பானி பூரிக்குள் மெக்ஸிகோ சாஸ், பீன்ஸ், புளிப்பு க்ரீம், சோளத்துடன் வறுத்த இறால்களையும் சேர்த்து இறால் பானிபூரி டக்கீடோவை பரிமாறுகிறார். இவர் தயாரிக்கும் உணவின் விலையும், அனைவரும் ஒரு முறையாவது முயற்சிக்கும் வண்ணம் பட்ஜெட்டுக்குள் இருப்பது கூடுதல் சிறப்பு.  இந்த கொரோனா காலத்தில் புதிய உணவகத்தைத் தொடங்குவதில் பல சிக்கல் உள்ளதால், தற்போது வீட்டிலேயே சமைத்து ஆன்லைன் செயலிகள் மூலம் ஹோம் டெலிவரி வசதி மட்டும் செய்கிறார்.

காவியாவிற்கு அலர்ஜி பிரச்சனைகள் இருந்ததால், தன்னை போலவே உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுக்கேற்ற உணவையும் தயாரித்துத் தருகிறார். ‘‘எனக்கு அலர்ஜி பிரச்சனைகள் இருந்ததால், என்னைப் போல அலர்ஜி பிரச்சனைகளும் ஆரோக்கியத்திற்காக டயட் உணவுகள் உட்கொள்பவர்களுக்கும் அவர்களுக்கு ஏற்ற உணவைச் சமைத்துக் கொடுக்கிறேன்.

ஆட்டிசம் பிரச்னையுள்ள சிறப்புக் குழந்தைகளுக்கு ஸ்பெஷல் டயட் இருக்கும். ஒரே வகையான உணவைத் தினமும் சாப்பிடுவது எவ்வளவு சலிப்பூட்டும் என்பது எனக்குத் தெரியும். இதனால் இரண்டு நாட்களுக்கு முன் ஆர்டர் கொடுத்துவிட்டால், அவர்களுக்கான உணவை வீட்டிலேயே தரமாக சமைத்துக் கொடுக்கிறேன். இதுபோன்ற பிரச்சனைகள் இருக்கும் சில வாடிக்கையாளர்கள் தொடர்ந்து என்னிடம் உணவை ஆர்டர் செய்கின்றனர்” என்கிறார்.

ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் தொடங்கி ஹோம் செஃப்பாக இருக்கும் அனுபவத்தைப் பகிர்ந்த காவியா, ‘‘நட்சத்திர உணவகங்களில் ஏற்கனவே தயாரிப்பு பொருட்கள் ரெடியாக இருக்கும். அவற்றைச் சமைக்கவும் பெரிய இயந்திரங்கள், சமையல் சாதனங்கள் இருக்கும். ஆனால் வீட்டுச் சமையலறையில் ஒவ்வொரு உணவையும் நானே ஆரம்பம் முதல் தயாரிக்கிறேன். இங்கே வீட்டில் எல்லாமே உயர் தரமான பொருட்கள்தான் பயன்படுத்துகிறேன். வீட்டுத் தோட்டத்தில் வளர்ந்த சில பொருட்களையும், சென்னையில் வீட்டுத்தோட்டம் வைத்திருக்கும் சில நண்பர்களிடமிருந்தும் கூட காய்கள் வாங்குவதுண்டு.

பெரிய ஹோட்டல்களிலும் இப்போது பெண் செஃப்கள் வர ஆரம்பித்துவிட்டார்கள்’’ எனக் கூறும் காவியா, “நான் துபாயில் நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்யும் போது அதிக அழுத்தம் இருந்தது உண்மைதான். ஆனால், அது ஆண்கள், பெண்கள் என இருவரையுமே பொதுவாகத்தான் பாதிக்கும். பெண்களுக்கு நிகராக ஆண்களும் அதே மன அழுத்தத்திற்குத்தான் ஆளாவார்கள். சில நிமிடம் ஓய்வெடுத்து மீண்டும் அதே சூழலில் பணியாற்றத் திரும்பிவிடுவர். ஆர்வத்துடன் எந்த பணியைச் செய்தாலும் அது நிச்சயம் வெற்றியடையும். ஒவ்வொரு சூழலையும் எதிர்கொள்ளும் போதுதான் அதைத் தாண்டி வரும் வழியும் தைரியமும் கிடைக்கும். அதனால் நம்பிக்கையுடன் உங்களுக்குப் பிடித்த செயலை தொடங்குங்கள்’’ என்கிறார்.

கொரோனா முடியும் வரை ஆன்லைன் டெலிவரி சேவையை மட்டும் வழங்கத் திட்டமிட்டுள்ளார். கொரோனாவின் தாக்கம் குறைந்ததும் படிப்படியாக வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடும் ஏற்பாடுகள் செய்யும் திட்டம் உள்ளதாம். தற்போது சோமேடோ மற்றும் மெக்ஸ் இட் அப் இன்ஸ்டாகிராம் பக்கம் வழியாக ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி மெக்சிகன் உணவு வரும் என்கிறார் காவ்யா.

வித்தியாசமான உணவு வகைகளை அனைவரும் சுவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவரது மெனு உருவாக்கப்பட்டிருக்கிறது. சுவையான உணவு, நம் மனநிலையையே மாற்றி உற்சாகத்தைத் தரும் எனக் கூறும் காவியா, ‘‘இங்குப் பலரும் சுவைக்காகவே சாப்பிடுகின்றனர். ஆனால் சுவையுடன் நாம் சாப்பிடும் உணவில் ஆரோக்கியமும் முக்கியம்.

நாம் என்ன சாப்பிடுகிறோம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதில் கவனம் வேண்டும். வீடுகளில் சமைப்பவர்கள் மருத்துவர்களுக்கு நிகரானவர்கள். வெளியே சாப்பிடும் ஆரோக்கியமற்ற உணவு வழியாகத்தான் பல நோய்கள் வருகின்றன. அதே நோய்களைப் போக்கும் மருந்தாகவும் உணவே இருக்கிறது” என்கிறார்.

புதிய சுவைகளைக் கண்டு பிடிப்பதில் ஆர்வம் கொண்ட இவர், தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல புதிய உணவுகளையும் அறிமுகப்படுத்தி வருகிறார். அவரது சமூக வலைத்தளங்களை பின்பற்றி புதிய உணவு வகைகளை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்தும் ருசிக்கலாம்.

செய்தி: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்

Tags :
× RELATED சோதனைகளும் சாதனைக்கே!