மீரட்: மீரட் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திற்கு வெளியே, பாஜக நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு நுழைய தடை விதித்து பேனர் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திற்கு வெளியே, பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளியே வைக்கப்பட்டுள்ள பேனரில் (இந்தியில் எழுதப்பட்டுள்ளது), ‘பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் காவல் நிலையத்திற்குள் உள்ளே நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று எழுதப்பட்டுள்ளது. மேலும், காவல் நிலையத்தின் நிலைய காவல் அதிகாரியின் பெயரும் எழுதப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமாஜ்வாதி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், மேற்கண்ட புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ‘ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் முதல்முறையாக, ஆளும் கட்சியினர் காவல் நிலையத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதான் பாஜக அரசின் நிலை’ என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் சவுத்ரி கூறுகையில், ‘அடையாளம் தெரியாத சிலரால் காவல் நிலையத்திற்கு வெளியே பேனர் வைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய சிலரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.