கொள்ளிடம்: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அடுத்த ஆச்சாள்புரத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான சிவலோக தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயில் தனி சன்னதியில் தோத்திர பூர்ணாபிகையுடன் திருஞானசம்பந்தர் திருமண கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். இந்த கோயிலில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அனைவரும் சிவஜோதி தரிசனத்தில் ஐக்கியமாகிய ஐதீக வரலாற்று நிகழ்வு ஆண்டுதோறும் வைகாசி வாதம் மூல நட்சத்திரத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் சிவலோக தியாகராஜ சுவாமி கோயிலில் திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம், சிவஜோதி தரிசனம் நேற்றிரவு நடந்தது. இரவு 9.30 மணியளவில் திருஞானசம்பந்தருக்கு உபநயனம், திருமுறைகள் திருவீதி வலம் வருதல், மாப்பிள்ளை அழைப்பு, மாலை மாற்றும் நிகழ்வு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பின்னர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு சிவஜோதி தரிசனம் நடந்தது.
