திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார புகாரைத் தொடர்ந்து பிரபல மலையாள நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு மலையாள நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டு உள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகர், தயாரிப்பாளராக இருப்பவர் விஜய் பாபு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு இளம் நடிகை விஜய் பாபு மீது கொச்சி போலீசில் பலாத்கார புகார் கொடுத்தார். அதில் படங்களில் நடிக்க கூடுதல் வாய்ப்பு தருவதாக கூறி விஜய் பாபு ஓட்டல்கள் அடுக்குமாடி குடியிருப்புக்கு வரவழைத்து தன்னை கொடூரமாக பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டு இருந்தார். ஒருமுறை உறவுக்கு மறுத்த போது தன்னை காலால் மிதித்து, அடித்து உதைத்ததாகவும் புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து கொச்சி போலீசார் நடிகர் விஜய் பாபு மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே தலைமறைவான விஜய் பாபு, முன்ஜாமீன் கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் விஜய் பாபுவை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
ஏற்கனவே அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பிய போலீசார், விசாரணைக்கு உடனே ஆஜராகுமாறு கூறி அவருக்கு இமெயில் மூலம் நோட்டீசும் அனுப்பி உள்ளனர். மேலும் கொச்சியில் உள்ள அவரது மனைவியிடமும் போலீசார் நோட்டீஸ் கொடுத்து உள்ளனர். விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் விஜய் பாபுவை துபாய் சென்று கைது செய்வது குறித்தும் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மலையாள நடிகர் சங்க நிர்வாக கமிட்டி கூட்டம் நேற்று கொச்சியில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் நிர்வாக கமிட்டியில் இருந்து நடிகர் விஜய் பாபுவை நீக்க தீர்மானிக்கப்பட்டது