வால்பாறை கூழாங்கல் ஆற்றில் உயிர் பலி வாங்கிய குழிகளை ராட்சத பாறைகள் நிரப்பி மூடல்-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

வால்பாறை :  வால்பாறையில் சுற்றுலா பயணிகள் குவியும் கூழாங்கல் ஆற்றில் உயிர்பலி வாங்கிய குழிகளை ராட்சத பாறைகள் மூலம் நிரப்பியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலாமான வால்பாறைக்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அவர்கள் வால்பாறை பகுதியில் ஆங்காங்கே ஓடும் ஆறுகளை பார்த்ததும் உடனே இறங்கி குளிக்க செல்கின்றனர். ஓடைகள், சிற்றோடைகள் என எதையும் விட்டு வைப்பது கிடையாது. அனைத்து பகுதிகளும் பசுமையுடன் காணப்படுவதால் ஆபத்தை உணராமல் இறங்கி விடுவது வழக்கம். அதிகப்படியான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்வது கூழாங்கல் ஆறுதான்.

இந்த ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு ஒரு பகுதி உகந்ததாக இருந்தது. மற்றொரு பகுதியில் பாறைக்குழி இருந்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தது.

இளைஞர்கள் அப்பகுதியின் இயற்கை அழகில் மயங்கி குளிக்கச் செல்லும்போது பாறைக்குழியில் சிக்கி கொள்வது வாடிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்ற வால்பாறை நகராட்சி நிர்வாகம் கூழாங்கல் ஆற்றில் உயிர் பலி ஏற்படுத்தி வந்த பாறை குழிகளை ராட்சத பாறைகள் கொண்டு ஓராண்டிற்கு முன் நிரப்பியது. தற்போது கொரோனா தளர்வுகளுக்கு பின் கூழாங்கல் ஆற்று பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள், பாறைக்குழிகள் மூடப்பட்ட பகுதிகளில் அமர்ந்து ரசிக்கின்றனர்.

அப்பகுதியில் உடை மாற்றும் அறைகள் மற்றும் அடிப்படை வசதிகளை மேற்கொள்ளவேண்டும் என நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: