×

மார்த்தாண்டத்தில் கேரளாவில் இருந்து மீன்கழிவுகளை ஏற்றி வந்த டெம்போ சிறைபிடிப்பு

*பொதுமக்கள் சாலை மறியல்

*ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

மார்த்தாண்டம் : மார்த்தாண்டத்தில் கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த டெம்போவை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.கேரளாவில் இருந்து நேற்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலை வழியாக டெம்போவில் மீன் கழிவுகள் வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மார்த்தாண்டம் பம்மம் பகுதியில் பொதுமக்கள் திரண்டனர். நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சதீஷ், விளவங்கோடு தொகுதி செயலாளர் மகேஷ்வரன் மற்றும் காங்கிரஸ், பாஜகவை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட கட்சி பிரமுகர்களும் வந்தனர்.

அப்போது துர்நாற்றம் வீசியபடி மீன்கழிவை ஏற்றிவந்த கூண்டு டெம்போவை சிறைபிடித்து குழித்துறை நகராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் அந்த டெம்போ அதிக துர்நாற்றம் வீசியதால் நகராட்சி ஆணையாளர் ராமதிலகம் மற்றும் அதிகாரிகள் அந்த டெம்போவை கீழ்பம்மம் பகுதியில் கழிவுகளை கொட்டும் இடம் அருகே கொண்டு நிறுத்தினர்.இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் அந்த டெம்போவிற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

இந்த நிலையில் டெம்போவில் இருந்து திடீரென வெளியேறிய கழிவுநீர் தரையில் கொட்டியது. கடுமையான துர்நாற்றம் வீசியதால் அந்த டெம்போவை உடனே இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் பாஜவை சேர்ந்தவர்கள் திடீரென மார்த்தாண்டம்-குலசேகரம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து அந்த டெம்போ குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையோரம் விஎல்சி மைதானத்தில் நிறுத்தப்பட்டது. அபராதம் செலுத்தியவுடன் அந்த டெம்போ மீன் கழிவுடனே மீண்டும் கேரளாவுக்கு திருப்பி அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

The post மார்த்தாண்டத்தில் கேரளாவில் இருந்து மீன்கழிவுகளை ஏற்றி வந்த டெம்போ சிறைபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Kerala ,Marthandam ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...