×

எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி இப்தார் விருந்தில் பங்கேற்ற நிதிஷ்குமார் ... பாஜகவை கழற்றிவிட்டு மெகா கூட்டணிக்கு தயாராகிறாரா?

பாட்னா : பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் திடீரென எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி அளித்த விருந்தில் பங்கேற்றுள்ளதால் பாஜகவை கழற்றிவிட்டு மீண்டும் மெகா கூட்டணிக்கு தயாராவதாக வியூகங்கள் எழுந்துள்ளன. 2017ம் ஆண்டு ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் மெகா கூட்டணியில் இருந்த போது பங்கேற்ற பிறகு 5 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் தேஜஸ்வி அளித்த இப்தார் விருந்தில் நிதிஷ் குமார் கலந்து கொண்டுள்ளார். அவருடன் பாஜக தலைவர்களான ஏ.என்.சிங்,  ஷா நவாஸ் உசைன், லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் ஆகியோரும் தேஜஸ்வி அளித்த விருந்தில் பங்கேற்றனர். நிதிஷ் குமார் புறப்பட்டு சென்ற பிறகும் கூட சிராக் பஸ்வான் நீண்ட நேரம் தேஜஸ்வி குடும்பத்துடன் உரையாடினார்.

ஆனால் இதில் அரசியல் ஏதும் இல்லை. தேவையற்ற வியூகங்கள் கூடாது என்று பாஜக கூறியுள்ளது. இது தொடர்பாக பாஜகவின் ஷா நவாஸ் உசைன், நான், சுஷில் மோடி அளித்த இப்தாரிலும் நிதிஷ் குமார் பங்கேற்றார். இங்கே தேஜஸ்வி இப்தார் இருந்து கொடுக்கிறார். எங்களை அழைத்தார்கள். நாங்கள் வந்தோம். இதில் அரசியல் நோக்கம் ஏதும் இல்லை,என்றார். 2020ம் ஆண்டு தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்த நிதிஷ் குமார் குறைந்த இடங்களையே பிடித்தாலும் கூட பாஜக தயவில் முதல்வராக தொடர்கிறார். தற்போது குடியரசு தலைவர் தேர்தலில் நிதிஷ் குமாரை நிறுத்தி அவரை டெல்லிக்கு அனுப்பி வைப்பதன் மூலம் பீகார் முதல்வர் பதவியை பாஜகவே எடுத்துக் கொள்ளலாம் என்று அக்கட்சி கணக்கு போடுவதாக தெரிகிறது. பாஜகவை எச்சரிக்கும் விதமாகவே தேஜஸ்வி அளித்த இப்தார் விருந்தில் நிதிஷ் குமார் பங்கேற்றதாக கூறப்படுகிறது. ஒரு வேளை இது அணி மாற்றத்திற்கான அச்சாரமாக அமைந்தால் ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் இணைந்து நிதிஷ் குமார் பதவியை தக்க வைக்கவும் வாய்ப்புள்ளது. 


Tags : Dejaswi Ipdar ,Nidishkumar , Opposition, Leader, Tejaswi, Iftar, Nitish Kumar
× RELATED பீகாரில் பரபரப்பு முதல்வர் நிதிஷ் மீது தாக்குதல்