×

ஆற்காட்டில் தடைசெய்யப்பட்ட 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்-₹35 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் அதிரடி

ஆற்காடு :  ஆற்காட்டில்  தடை செய்யப்பட்ட 4 டன் பிளாஸ்டிக் பொருட்களை கலெக்டர் தலைமையில் நேற்று இரவு அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டு ₹35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.  ஆற்காட்டில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று இரவு திடீர் ஆய்வு செய்தார். அப்போது 25க்கும் மேற்பட்ட கடைகளில் அதிரடியாக சோதனை நடத்தப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட 4 டன் 350 கிலோ எடையுள்ள பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டு ₹35 ஆயிரம்அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து  கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கடை உரிமையாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசு எந்த நோக்கத்திற்காக தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து உள்ளதோ அதை வியாபாரிகள்  உணர்ந்து அந்த பொருட்களை கடைகளுக்கு  விற்பனை செய்வதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் வணிக கடைகளில்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களில்  நுகர்வோர்களுக்கு பொருட்களை அடைத்து  வழங்குவதை தவிர்க்க வேண்டும். அதற்கு மாற்று பொருளை பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

மேலும் எதிர்வரும் நாட்களில் இந்த அதிரடி சோதனை தீவிரப்படுத்தப்படும். எனவே வியாபாரிகள் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் ஒத்துழைப்பு தரும் வகையில்  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மற்றும் குடோன்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும்  பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் 2 கடைகளுக்கு அதிரடியாக அதிகாரிகள் சீல் வைத்தனர்.

அப்போது ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, ஆற்காடு  நகராட்சி ஆணையர் சதீஷ்குமார், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சுகாதார அலுவலர் பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் அமுதவல்லி, விஏஓ கபிலன், மேற்பார்வையாளர்கள் கேசவன், பிரேம்நாத், ஆற்காடு டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் வருவாய்த்துறை, நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

 இதேபோல் முன்னதாக ஆற்காடு நகராட்சி ஆணையர் பி.சதீஷ்குமார் தலைமையில் சுகாதார அலுவலர் எம்.பாஸ்கர், சுகாதார ஆய்வாளர் எம்.செல்வராஜ், மேற்பார்வையாளர்கள் கேசவன், பிரேம் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பார்வையாளர்கள் கொண்ட குழுவினர் நேற்று முன்தினம் பஜார் வீதி உட்பட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டும், பயன்படுத்திக் கொண்டிருந்த கடைகளுக்கு ₹ 35 ஆயிரம் அபராதம் விதித்து 750 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மீண்டும் இதுபோன்று விற்பனை செய்தாலோ பயன்படுத்தினாலோ அபராதம் விதிப்பதோடு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

Tags : Arcot ,Collector , Arcot: 4 tonnes of banned plastic items in Arcot were confiscated by the Collector last night for 35
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...