×

வங்கி கடன் செலுத்த தவறியதால் மிரட்டல் காவல் நிலையம் முன்பு தம்பதி தீக்குளிப்பு: வேலூர் அருகே பரபரப்பு

ஒடுகத்தூர் வேலூர் அருகே வங்கியில் பெற்ற கடனை செலுத்தும்படி மிரட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளான தம்பதி, காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு அங்கேயே தீக்குளித்தனர். வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த பெரிய ஏரியூர் கிராமத்தை சேர்ந்தவர் தினகரன் (29). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி வேன் டிரைவராக உள்ளார். இவரது மனைவி தேவி (25). ஒடுகத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் பந்தன் என்னும் தனியார் வங்கியில் ரூ.30 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். இதற்கு வாரம் ரூ.800 என 15 வாரங்கள் கட்டியுள்ளார். இந்நிலையில், குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த வாரம் வங்கி கடன் செலுத்தவில்லை. அதை வசூல் செய்யும் குழுவின் தலைவராக அதே பகுதியை சேர்ந்த குபேந்திரன் மனைவி சிலம்பரசி(35) உள்ளார். வங்கிக்கு கட்ட வேண்டிய கடன் தொகையை உடனே கட்டும்படி சிலம்பரசி தேவி வீட்டிற்கு சென்று வற்புறுத்தியுள்ளார்.

நேற்று மாலையும் தேவி வீட்டிற்கு சென்று கடன் தொகையை இன்றே செலுத்தும்படி கூறி ஆபாசமாக திட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான தினகரன் அவரது மனைவி தேவி ஆகியோர் நேற்று வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் வெளியே வந்த இருவரும் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டனர். தீ பற்றி எரிந்ததும் வலி தாங்க முடியாமல் அலறியபடி மணலில் உருண்டனர். உடனே போலீசார் வந்து கோணிப்பையை போர்த்தி தீயை அணைத்து ஒடுகத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். தீயை உடனே அணைத்ததால் லேசான தீக்காயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து போலீசார், வங்கி சார்பில் தொல்லை கொடுத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Vellore , Couple set on fire before intimidation police station for failing to repay bank loan: riot near Vellore
× RELATED வேலூர் அருகே முன்னாள் பஞ்சாயத்து...