×

கேன் வில்லியம்சன் அரை சதம் குஜராத்தை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்

மும்பை: குஜராத் அணியுடனான ஐபிஎல் லீக் ஆட்டத்தில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி  8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. டி.ஒய்.பாட்டீல் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் முதலில் பந்துவீசியது. வேட், கில் இருவரும் குஜராத் இன்னிங்சை தொடங்கினர். கில் 7 ரன், சுதர்ஷன் 11, வேடு 19 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஹர்திக் - மில்லர் ஜோடி 4வது விக்கெட்டுக்கு 40 ரன் சேர்த்தது. மில்லர் 12 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஹர்திக்குடன் இணைந்த அபினவ் மனோகர் அதிரடியாக விளையாட, குஜராத் ஸ்கோர் கணிசமாக உயர்ந்தது. இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 50 ரன் சேர்த்தது. மனோகர் 35 ரன் (21 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வெளியேறினார்.

பொறுப்புடன் விளையாடிய ஹர்திக் அரை சதம் அடித்தார். திவாதியா 6 ரன் எடுத்து ரன் அவுட்டானார். நடராஜன் வீசிய கடைசி பந்தில் ரஷித் கான் டக் அவுட்டாக, 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது. ஹர்திக் 50 ரன்னுடன் (42 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சில் புவனேஷ்வர், நடராஜன் தலா 2, ஜான்சென், உம்ரான் மாலிக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். வாஷிங்டன் சுந்தர் விக்கெட் எடுக்காவிட்டாலும், 3 ஓவரில் 14 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

அடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் 19.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 168 ரன் எடுத்து அபாரமாக வென்றது. கேப்டன் கேன் வில்லியம்சன்  அதிகபட்சமாக 57 ரன் (46 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். அபிஷேக் சர்மா 42 ரன், நிக்கோலஸ் பூரன் 34ரன் எடுத்தனர். குஜராத் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா, ரஷித் கான் தல ஒரு விக்கெட் வீழ்த்தினர். சன்ரைசர்ஸ் 2 புள்ளிகளை தட்டிச் சென்றது. ஹர்திக் 100: ஐபிஎல் தொடரில் குறைந்த பந்துகளில் 100 சிக்சர்களை விளாசிய இந்திய வீரர் என்ற சாதனை (1046 பந்து), குஜராத் கேப்டன் ஹர்திக் வசமாகி உள்ளது. வெளிநாட்டு வீரர்களில் ரஸ்ஸல் 657 பந்துகளிலும், கிறிஸ் கேல் 943 பந்துகளிலும் 100 சிக்சர் விளாசி முதல் 2 இடத்தில் உள்ளனர். இந்திய வீரர்கள் ரிஷப் பன்ட் (1224 பந்து), யூசுப் பதான் (1313), யுவராஜ் சிங் (1336) முறையே 6வது, 7வது, 8வது இடங்களில் உள்ளனர்.

Tags : Kane Williamson ,Gujarat ,Sunraisers , Kane Williamson beat Gujarat by half a century Sunrisers
× RELATED உலகக் கோப்பை டி20: சூர்யகுமார்...