என்னையே நான் கிள்ளிப் பார்க்கிறேன்!

நன்றி குங்குமம் தோழி

நடிகர் அருண்

‘‘ரஜினி சாரோட ‘படையப்பா’ படத்தை தியேட்டரில் பார்க்கும் போது எல்லோரும் கை தட்டி கொண்டாடினாங்க. அதை பார்த்து நானும் பெரிய ஹீரோவா ஆகணும்னு ஆசை ஏற்பட்டது” என்கிறார் நடிகர் அருண். தமிழகத்தில் சீரியல்களின் தலைமகனான சன் டி.வியில் தினந்தோறும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும்’பூவே உனக்காக’ தொடரின் நாயகன் அருணின் சொந்த ஊர் கோவை. அப்பா ஆட்டோ டிரைவர், அம்மா இல்லத்தரசி. தம்பியும் கலை துறை சார்ந்து இயங்கி கொண்டிருக்கிறார். “சின்ன வயசுல இருந்தே டி.வில எது பார்த்தாலும் அதே மாதிரி நடிச்சு காட்டுவேன். அப்படிதான் ‘படையப்பா’ படம் பார்த்துட்டு சூப்பர் ஸ்டார் சல்யூட் அடிக்கும் போது ‘உஷ்…உஷ்…’னு சத்தம் வர மாதிரி பண்ணினேன்.

அதுல இருந்து எல்லோரும் படையப்பானு என்னை கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. அப்போது இருந்து எனக்கும் ஒரு நடிகரா ஆகணும்னு ஆசை ஏற்பட்டது. ரஜினி சாரை ஸ்கிரீன்ல பார்க்கும் போது நம்மல அறியாமலயே கதை தட்டி ரசிக்க ஆரம்பிச்சுருவோம். அவரை போல நானும் வருவேனு சொன்னா எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்கன்னு யார்கிட்டையும் சொல்லாம என்னோட மனசுக்குள்ளேயே நடிப்பு ஆசையை பூட்டி வச்சிருந்தேன்.

அதே போல் திரையில் ஹீரோக்களை பார்க்கும் போது எல்லாம், அவங்கள போல நாமும் பெரிய ஸ்கிரீனில்  பார்க்க கெத்தா இருப்போமா?ன்னு எனக்குள்ளே நான் கேள்வி கேட்டுக் கொள்வேன். அதையும் தாண்டி மிடில் கிளாஸ் பையன். எந்த வித சினிமா பின்னணியும் எனக்கு கிடையாது. மனசுக்குள் ஆசை இருந்தாலும் ஒரு தயக்கத்தோடே இருந்தேன்.  பன்னிரெண்டாம் வகுப்பு முடிச்சிட்டு, விஸ்காம் தான் படிப்பேன்னு வீட்டில் சண்டைப் போட்டேன். 80% மேல தேர்ச்சி பெற்று இருந்ததால், எஞ்சினியரிங் தான் படிக்கணும்னு அதில் சேர்த்து விட்டாங்க. அப்புறம் என்ன நடிப்பை மூட்டைக் கட்டி வச்சிட்டு பொறியியல் படிக்க ஆரம்பிச்சேன். என்னோட தம்பி மோனோ ஆக்ட் எல்லாம் பண்ணுவான்.

சிவகார்த்திகேயன் சார் கூட முதலில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளரா தான் வந்தார். அதன் பிறகு தொகுப்பாளரா மாறினார். இப்போது எல்லாருக்கும் பிடிக்கும் பெரிய நடிகரா இருக்கார். அவரைப்போல் நானும் எப்படியாவது நடிப்பு துறையில் நுழையணும்னு நினச்சேன். அந்த நேரத்துலதான் ‘நீங்களும் ஆகலாம் விஜய் ஸ்டார்’னு ஒரு நிகழ்ச்சியில கலந்துக்க என் தம்பிக்கு வாய்ப்பு கிடைச்சது. அவனுடன் சேர்ந்து நானும் அதில் பங்கு பெறலாம்னு நினைச்சேன். முயற்சி செய்து பார்ப்போம்ன்னு, அதுவரைக்கும் படிப்பில் மாட்டுமே கவனம் செலுத்தின நான், நடிப்பு மூட்டையை அவிழ்க்க வேண்டிய நேரம் வந்தது. நிகழ்ச்சியில் பங்கு பெற்றேன். ஆனா, நான் செலக்ட் ஆவேன்னு நினைச்சுக் கூட பார்க்கல. கோயம்புத்தூர்ல மட்டும் நாலாயிரம் பேருக்கு மேல கலந்துகிட்டாங்க. அதில் நான் ஃபைனலிஸ்டாக தேர்வானேன்.

அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்ட் மூலமா, சினிமால சின்னச் சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. ஷூட்டிங் இருக்கும் போது எல்லாம் காலேஜ் கட் அடிச்சிடுவேன். ஒரு நாள் வீட்டுல தெரிஞ்சிடுச்சு. அம்மா, அப்பா இரண்டு பேரும் செம திட்டினாங்க. அம்மாவோட ஒரே ஆசை, நான் எஞ்சினியரிங் படிச்சுட்டு நல்ல கம்பெனியில வேலைக்கு போகணும் என்பது தான். அவங்க ஆசையை நான் நிறைவேறா ஆசையாக்கிடுவேனோன்னு அம்மா ரொம்ப சங்கடப்பட்டாங்க. படிப்பு போக கிடைக்கும் நேரத்தில் நடிப்பதாக சொல்லி அவங்கள சமாதானம் செய்தேன்.

நண்பர்களின் ஷார்ட் பிலிம்ல நடிப்பது மட்டும் இல்லாமல் அவ்வப்போது சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. அதன் மூலம் சினிமா பற்றி நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன். இப்போது ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடிச்சிருக்கேன். அது ஓ.டி.டியில் ரிலீசாக இருக்கு’’ என்று கூறும் அருண் ‘பூவே உனக்காக’ சீரியலில் நடித்த அனுபவத்தை பகிர்ந்தார். ‘‘நடிக்கிறதோடு மட்டுமல்லாமல் வி.ஜே, டான்ஸ் எல்லாம் பண்ணுவேன். பட வாய்ப்புகள் கிடைத்தாலும், ஷூட்டிங் வரை வந்து தள்ளி போகும். பெரிய பெரிய படங்களிலும் இப்படித்தான் நடந்தது. வீட்டுலையும் வேலைக்கு போக அழுத்தம் கொடுக்க ஆரம்பிச்சாங்க. அதுக்காக ஒரு நாலு மாசம் பேங்க்ல வேலை பார்த்தேன். அப்ப தான் சினிமா மட்டும் முயற்சி பண்ணாம சீரியலிலும் முயற்சி செய்ன்னு ஃபிரண்ட்ஸ் சொன்னாங்க. இவங்க சொன்ன அதே நேரத்துல சன் டிவி-ல இருந்து, ‘ஒரு சீரியல் ஆரம்பிக்க போறோம்.

ஆடிசன் வாங்க’னு ஃபோன் வந்தது. முதலில் என்னால் நம்பவே முடியல. ஆடிஷனுக்கு போனேன். இப்போது அந்த சீரியலின் நாயகனா நடிக்கிறேன். சின்ன வயசுல இருந்து எனக்குள்ளே மட்டுமே நான் கண்ட கனவு நிறைவேறும் போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. எனக்கு இந்த சீரியலில் நடிக்கிறதுல கூடுதல் சந்தோஷம் என்னென்னா நான் உடன் நடிக்கும் நடிகர்கள் எல்லோருமே சீனியர்ஸ். அவங்களோட அனுபவம் தான் என் வயசு. நான் சின்ன வயசில்டி.வியில பார்த்தவங்க கூட இப்ப நடிக்கும் போது என்னையே நான் கிள்ளிப் பார்த்துக்கிறேன். இந்த மாதிரி அமைஞ்சது எல்லாமே ஆசீர்வாதமாதான் பார்க்கிறேன்” என்கிறார் நடிகர் அருண்.

தொகுப்பு: அன்னம் அரசு

படங்கள்: ஜி.சிவக்குமார்

Related Stories:

>