×

கொரோனாவால் நிறுத்தப்பட்ட மன்னார்குடி ரயில் திருச்சி வரை மட்டும் மீண்டும் இயக்கம்

மானாமதுரை : கொரோனாவால் நிறுத்தப்பட்ட மன்னார்குடி ரயில் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படுவதால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனர். கடந்த 2011ம் ஆண்டு முதல் மானாமதுரை-மன்னார்குடி இடையே தினமும் பகல் 1.45 மணிக்கு பயணிகள் ரயில் இயக்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்த ரயில் நிறுத்தப்பட்டது.

தற்போது கொரோனா தொற்று நாடு முழுவதும் குறைந்துள்ள நிலையில் பயணிகள் கோரிக்கை காரணமாக நேற்று முதல் மன்னார்குடி ரயில் திருச்சி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் மன்னார்குடி வரை இயக்கப்படும் என்று நம்பி வந்த பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.

இது குறித்து ரயில் பயணிகள் கூறுகையில், 2011ம் ஆண்டு முதல் மானாமதுரையில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், திருவாரூர், மன்னார்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கு இந்த ரயில் உபயோகமாக இருந்தது. மானாமதுரையில் இருந்து புறப்பட்டாலும் ராமநாதபுரம், பரமக்குடி, பார்த்திபனூர், முதுகுளத்தூர் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கானோர் தினமும் இந்த ரயிலை பயன்படுத்தி வந்தனர்.

 குடும்பத்துடன் செல்வதற்கும், முதியவர்கள், கர்ப்பிணிகள், வயது குறைந்தவர்களுக்கு இந்த ரயில் வசதியாக இருந்தது. தற்போது மானாமதுரையில் இருந்து திருச்சி வரை மட்டுமே இயக்கப்படுவதால் திருச்சியில் இருந்து மன்னார்குடி செல்லும் பயணிகள் திருச்சியில் மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டும். எனவே தென்னக ரயில்வே அதிகாரிகள் மீண்டும் ஏற்கனவே இயங்கி வந்த வகையில் மானாமதுரை மன்னார்குடி வரை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Corona ,Tiruchi , Manamadurai,Trichy,,Mannargudi, DEMU Train
× RELATED மூதாட்டியிடம் செயின் பறிப்பு