×

நாங்குநேரி தாலுகா நெல் கொள்முதல் நிலையங்களில் பணிகள் மந்தம்: இரவிலும் காத்து கிடக்கும் விவசாயிகள்

நாங்குநேரி: நாங்குநேரி தாலுகா நெல் கொள்முதல் நிலையங்களில் பணிகள் மந்த கதியில் நடப்பதால் இரவில் விவசாயிகள் காவல் காத்து வருகின்றனர்.
நாங்குநேரி தாலுகாவில் சிந்தாமணி, அம்பலம், மூன்றடைப்பு, கீழக்காடு வெட்டி மற்றும் திருக்குறுங்குடி ஆகிய ஊர்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. தற்போது தாலுகா முழுவதும் நெல் அறுவடைப்பணிகள் தீவிரமாக நடந்து வருவதால் அறுவடை செய்த நெல்லை விற்பனைக்காக அரசு கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்கின்றனர்.

வெளிச்சந்தையை விட அரசு  வழங்கும் ஆதார விலையோடு ஒப்பிடுகையில் கூடுதல் விலை கிடைப்பதால் விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்
களுக்கு நெல்லை கொண்டு செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். இதற்காக பயிரிடப்படும் நிலத்தின் அடங்கல், பட்டா, சிட்டா, வங்கிக்கணக்கு ஆகியவற்றுடன் கணினியில் முன் பதிவு செய்கின்றனர். ஆனால் நாளொன்றுக்கு ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தலா ஆயிரம் முட்டைகள் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. நெல் வரத்து 2000 மூட்டைகளுக்கு மேல் இருப்பதால் பலர் நெல்லை விற்க முடியாமல் ஆங்காங்கே தரையில் குவித்து வைத்துள்ளனர்.

போதிய இட வசதி இன்மையால் தனியார் பட்டா நிலங்களில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை எவ்வித பாதுகாப்பும் இன்றி திறந்தவெளியில் சேமித்து வைத்து காத்திருக்கின்றனர். மேலும் திடீரென கோடை மழை பெய்தால் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகும் ஆபத்து இருப்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மந்தமாக நடக்கும் நெல் கொள்முதல் பணியால் எவ்வித பாதுகாப்பும் இல்லாததால் முன்பதிவு செய்த விவசாயிகள் தங்களது வரிசை முறையை எதிர்பார்த்து இரவும் பகலும் நெல்லுக்கு காவல் காத்துக்கிடக்கின்றனர்.

 இந்நிலையில் நெல் கொள்முதல் நிலையங்களுக்குள் அடிக்கடி புகுந்துவிடும் கால்நடைகள், பறவைகள் போன்றவற்றால் நெல் சேதம் அடைந்து வருகிறது. தரமற்ற கிழிந்த சாக்கு பைகள் வழங்கப்படுதல், தொழிலாளர்கள் பற்றாக்குறை, அதிகாரிகளின் மெத்தன போக்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நெல் கொள்முதல் பணிகள் தாமதமாக நடப்பதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் இதர விவசாய பணிகளைக் கவனிக்க  முடியாமல் சிரமப் படுவதால் கொள்முதல் பணிகள் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.

அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்திறன் உயர்த்த வேண்டும்  எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது ஏப்ரல் 25ஆம் தேதி வரைக்கும் நெல் கொள்முதல் கணினி முன்பதிவுகள் முடிந்துள்ளதால் அதற்கு முன்பு அறுவடை செய்த நெல்லை விற்பதற்காக விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றிற்கு போதிய பாதுகாப்பு இல்லாததால் இரவிலும் காவல் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் அரசு வழங்கும் நெல்லை ஏற்றி இறக்கும் கூலி போதுமானதாக இல்லை என கூறி சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு வர மறுப்பதாக கூறப்படுகிறது.

இதனால் கூடுதல் செலவுகளை சரிக்கட்ட வெளியாட்கள் மூலம் மூடை ஒன்றுக்கு 50 ரூபாய் வீதம் விவசாயிகளிடம் வசூலிப்பதாகவும் அனுமதிக்கப்பட்ட ஒரு மூட்டைக்கு 40 கிலோ என்பதற்குப்பதிலாக 2 கிலோ நெல் கூடுதலாக பெற்று மூடை ஒன்றுக்கு 42 கிலோ கொள்முதல் செய்து முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். அண்மையில் பாளையங்கோட்டை அடுத்த முன்னீர்பள்ளம் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் பணம் வசூல் செய்த ஊழியர் லஞ்ச ஒழிப்புத் துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நெல்கொள்முதல் நடக்க இருப்பதை கருத்தில் கொண்டு நாங்குநேரி தாலுகாவில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள், சேமிப்புக் கிடங்குகள், நெல்லை தூய்மைப்படுத்தும் களம் மற்றும் கருவிகள் அமைக்க வேண்டும். மேலும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வெளியாட்கள் வருவதை தடுக்க கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தவும் முறைகேடுகளை தடுத்து விவசாயிகளை சுரண்டலில் இருந்து காக்கவும் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags : Nanguneri Thaluka ,Paddy , Work slowdown at Nanguneri taluka paddy procurement centers: Farmers waiting overnight
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...