×

பாதியிலேயே நின்ற பேட்ச் ஒர்க் பணி பழுதடைந்த வில்லியனூர்- பத்துக்கண்ணு சாலையால் வாகன ஓட்டிகள் அவதி-நடவடிக்கை எடுக்க கோரிக்கை

வில்லியனூர் : புதுச்சேரியில் இந்த ஆண்டு வழக்கத்துக்கு அதிகமாக கனமழை பெய்ததால் ஆங்காங்கே சாலைகளில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. வில்லியனூர்- பத்துக்கண்ணு செல்லும் சாலையில் ஆங்காங்கே மிகப்பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. வாகனங்கள் செல்வதற்கு தகுதியற்ற சாலையாக இது உள்ளது. இருப்பினும் அப்பகுதி மக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளங்களில் சிமெண்ட், ஜல்லி கலந்த கலவையை கொட்டி சாலையை சீரமைத்து வருகின்றனர். இருப்பினும் அதிக அளவில் கனரக வாகனங்கள் செல்வதால் ஒரு வாரத்திற்குள் மீண்டும் ஜல்லிகள் பெயர்ந்து பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு விடுகின்றன.

இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இன்னும் சிலர் சாலையில் உள்ள பள்ளங்களை தவிர்ப்பதற்காக வளைந்து செல்லும்போது எதிரே வரும் வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்குகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் தினந்தோறும் அவதிப்படுகின்றனர்.

 இந்த சாலையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் ரத்த காயங்களுடன் செல்லும் அவல நிலையுள்ளது. இது சம்பந்தமாக அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களிடம் பலமுறை கோரிக்கை வைத்ததின் பேரில், பொதுப்பணித்துறை சார்பில் ரூ.14 லட்சம் செலவில் பேட்ச் ஒர்க் செய்வதற்கு பணிகள் துவங்கப்பட்டது. அதற்காக சாலை நெடுகிலும் ஜல்லிகள் கொட்டப்பட்டது. பணிகள் துவங்கி, ஒரு நாள் மட்டும் நடைபெற்றது. அதன்பிறகு ஒப்பந்ததாரர்களுக்கு ஏற்பட்ட சில நெருக்கடியால் பணியை பாதியிலேயே விட்டுவிட்டு சென்று விட்டனர். இதனால் சாலையை சீரமைக்க கொட்டப்பட்ட ஜல்லிகள் அனைத்தும் சாலையோரத்தில் குவியல், குவியலாக ஆங்காங்கே கிடக்கிறது.

 பேட்ச் வொர்க் செய்வதற்காக அந்தந்த பள்ளங்களில் நடந்த சீரமைப்பு பணிகளும் பாதியிலேயே நின்றுவிட்டது. இதனால் இந்த சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள், இரவு நேரங்களில் செல்லும்போது சாலையோரம் கொட்டப்பட்டுள்ள ஜல்லிகள் மீது மோதி கீழே விழுகின்றனர். எனவே உயிர்சேதம் ஏற்படும் முன் சாலை சீரமைப்பு பணிகளை மீண்டும் தொடங்கி முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Villianur-Pattukkannu road , Villianur: Heavy rains lashed Pondicherry this year, shifting the roads.
× RELATED சென்னை முழுவதும் சீரான குடிநீர்...