காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை கோரி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சிக்கும் தேர்தல் நடைபெறுகிறது. அதில் மாநகராட்சியின் 36வது வட்ட அதிமுக செயலாளராக இருந்த ஜானகிராமன் அதே வார்டில் அதிமுக சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்ப்பட்டது. அவர் வேட்பு மனு தாக்கல் செய்து தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை அவர் வீட்டிலேயே தற்கொலை கொண்டார். தகவல் அறிந்து சென்ற விஷ்ணு காஞ்சி போலீசார் உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த அதிமுகவினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உத்தரவாதம் அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு அதிமுகவினர் களைந்து சென்றனர். தொடர்ந்து ஜானகிராமன் தற்கொலைக்கான காரணம் குறித்து உறவினர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் அவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. உடல் நிலை பாதிப்பால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாநகராட்சியின் 36வது வார்டில் கட்சி வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டாதால் அந்த வார்டில் தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீண்டும் புதிய அறிவிப்பாணை வெளியிட்டு, தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது.
