×

கொலை உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடைய பிரபல தாதா ஸ்ரீதர் தனபாலின் வலதுகரமாக இருந்த ரவுடி தினேஷ் நீதிமன்றத்தில் சரண்: 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டம்

சென்னை, பிப். 8: கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்ட பிரபல தாதா தர் தனபாலின் கார் டிரைவராகவும், வலதுகரமாகவும் செயல்பட்டு வந்த ரவுடி தினேஷ் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார். அவன் மீது கொலை உட்பட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதால், அவனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் தர் தனபால். பிரபல தாதாவான இவர் மீது கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகள் தமிழகம் முழுவதும் உள்ளது. என்கவுன்டருக்கு பயந்து தாதா தர் தனபால் 2017ம் ஆண்டு கம்போடியாவிற்கு சென்றார். எனினும், அவர் தற்கொலை செய்து கொண்டார். அப்போது, தர் தனபாலுக்கு வலதுகரமாக காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடிகளான தினேஷ், தணிகா, பொய்யாகுளம் தியாகு ஆகியோர் இருந்தனர். தினேஷ், தர் தனபாலுக்கு கார் டிரைவராகவும் இருந்து வந்தார். தாதா தர் தனபால் தற்கொலைக்கு பிறகு அந்த இடத்திற்கு வர மூன்று ரவுடிகளுக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு வந்தது. இதில் தர் தனபாலுவின் கார் டிரைவராக இருந்த ரவுடி தினேஷ் காஞ்சிபுரத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்றார். ரவுடி தினேஷ் மீது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தமிழகம் முழுவதும் ரவுடிகளை கட்டுப்படுத்தும் வகையில் கைது செய்து வருகின்றனர். அதேநேரம் ஏ மற்றும் ஏ பிளஸ் ரவுடிகளை என்கவுன்டர் செய்யவும் முடிவு செய்யப்பட்டது. இதனால் போலீசாரின் என்கவுன்டருக்கு பயந்து ரவுடி தினேஷ் தலைமறைவாகிவிட்டார்.
கடந்த மாதம் போலீசாரின் என்கவுண்டருக்கு பயந்து பிரபல ரவுடி படப்பை குணா சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதைதொடர்ந்து பிரபல தாதா தர் தனபாலனுடன் இருந்த ரவுடி பொய்யாகுளம் தியாகுவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.இந்நிலையில், பிரபல ரவுடி தினேஷ் மட்டும் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்தார்.

பிறகு தினேஷூக்கு அடைக்கலம் மற்றும் உதவிகள் செய்து வந்ததாக கடந்த 28ம் தேதி இரவு சென்னை சாலிகிராமம்  தசரதபுரம் பகுதியை சேர்ந்த அதிமுக 129வது வட்ட செயலாளரான எஸ்.பி.குமார் மற்றும் துரைப்பக்கத்தில் பதுங்கி இருந்த ரவுடி பரணி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ரவுடி தினேஷ் இருக்கும் இடத்தை போலீசார் நெருங்கியது. போலீசார் கையில் சிக்கினால் கண்டிப்பாக என்கவுன்டர் செய்யப்படுவோம் என்று தினேஷ் அச்சமடைந்து பல இடங்களில் மறைந்து இருந்து வந்தார்.

இந்நிலையில், பிரபல ரவுடி தினேஷ் சைதாப்பேட்டை 9வது கூடுதல் நீதிமன்றத்தில்  நேற்று சரணடைந்தார். அதைதொடர்ந்து நீதிமன்றம் ரவுடி தினேஷை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. அதைதொடர்ந்து ரவுடி தினேஷை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், ரவுடி தினேஷ் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Tags : Rowdy Dinesh ,Dada Sridhar Danapal , Rowdy Dinesh, right hand man of famous Dada Sridhar Dhanapal involved in more than 50 cases including murder, surrenders in court: Police plan to take him into custody for 5 days
× RELATED ரவுடி ஸ்ரீதரின் கார் டிரைவருக்கு...