×

சமூக ஊடகங்களில் பெண்களின் பாதுகாப்பு...

நன்றி குங்குமம் தோழி

பெண்களுக்கு எதிரான சைபர் கிரைம்கள் நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் நம் கைக்குள் அடங்கிவிடும் மொபைல் போன்கள். நாம் இருக்கும் இடம் முதல் நாம் சாப்பிடும் உணவு வரை பெண்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். இது மற்றவர்களுக்கு சாதகமாகவும் பெண்களுக்கு பாதகமாகவும் அமைந்துவிடுகிறது.

‘‘600 மில்லியன் பெண்களை தொலைத்தொடர்பில் இணைப்பதால், உலகளாவிய உற்பத்தியை 18 பில்லியன் டாலர்களாக உயர்த்த முடியும்’’ என்று ஐ.நாவின் சிறப்பு நிறுவனமான சர்வதேச தொலைத் தொடர்பு ஒன்றியம் சமீபத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. இருப்பினும் பெண்கள் இணையத்தை இயக்க வேண்டும் என்றால் அது அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

பெண்கள் தொழில்நுட்ப ரீதியாக தங்களை பாதுகாத்துக் கொள்ள அதற்கான திறனை வலுப்படுத்த ‘தேசிய மகளிர் ஆணையம் (NCW)’ செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் பெண்களுக்கு டிஜிட்டல் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், அதனை பாதுகாப்பாக செயல்படுத்தவும், அபாயங்களை அடையாளம் கண்டு சமூக வலைத்தளங்களை மிகவும் எச்சரிக்கையாக நிர்வகிக்கவும் உதவுகிறது.சமூக வலைத்தளங்களில் ஒவ்வொரு பெண்களும் கவனிக்க மற்றும் பின்பற்ற வேண்டிய விஷயங்கள்...

*அந்நியர்களுடன் சமூக வலைத்தளங்களில் இணைய வேண்டாம்.

*உங்கள் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடும்போது, மிகவும் கவனமாக இருப்பது அவசியம். மார்ஃபிங் செய்ய வாய்ப்புள்ளது.

*சமூக வலைத்தளங்களில் நீங்கள் பயன்படுத்தும் கடவுச் சொற்களை (password) மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும்.

*உங்கள் செல்போனில் உள்ள லொகேஷனை (இருப்பிடத்தை குறிப்பது) எப்போதும் மறைத்து வைப்பது அவசியம். அதன் மூலம் நீங்கள் இருக்கும் இடத்தினை இது மற்றவர்களுக்கு வெளிப்படுத்தாது.

*உங்களின் தனிப்பட்ட செய்தி அல்லது புகைப்படத்தினை சமூக வலைத்தளங்களில் பகிரும்போது, இருமுறை சிந்தித்து செயல்படுங்கள்.

*உங்கள் கைபேசியினை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். மேலும் அதில் வைரஸ் தாக்குதல் ஏற்படாமல் இருக்க ஆன்டி வைரஸ் பயன்படுத்துவது அவசியம்.

*உங்கள் செல்போன், கணினி தவிர மற்றவர்களின் செல்போனிலோ அல்லது நெட்சென்டரிலோ பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர்... போன்ற உங்களின் தனிப்பட்ட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தாமல் இருப்பது அவசியம்.

*சமூக வலைத்தளங்களை எங்கு பயன்படுத்தினாலும் கடைசியாக அதில் இருந்து வெளியேறி (logout) விட வேண்டும்.

தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காலத்திலும் இன்றும் பழமை மாறாமல் நாம் பெண்களுக்கு மட்டுமே அறிவுரை செய்து வருகிறோம். பெண்களைக் கண்டிப்பது போல், வீட்டில் வளரும் ஆண் பிள்ளைகளுக்கும் பெண்களை எவ்வாறு மதிக்க வேண்டும் என்று அவர்கள் சிறு வயதில் இருந்தே சொல்லி வளர்க்க வேண்டும். அவர்களை எந்த சூழலிலும் இழிவுபடுத்தக்கூடாது... அது மெய் உலகமாக இருந்தாலும் சரி, மெய்நிகர் உலகமாக இருந்தாலும் சரி... இதனை ஒவ்வொரு ஆணும் கடைப்பிடிப்பது அவசியம்.

Tags : women ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...