ஆவடி காவல் ஆணையரகம் பகுதிகளில் முக கவசம் அணிந்தவர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி போலீசார் நன்றி

ஆவடி: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதையடுத்து அந்த நோயை கட்டுப்படுத்த அனைவரும் முக கவசம் அணியவேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும், அடிக்கடி கைகளை கழுவவேண்டும் என்று தமிழக அரசு அறிவுரை வழங்கி வருகிறது. இந்த நிலையில், ஆவடி காவல் ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 25 காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் முக கவசம் அணிந்துசெல்லும் வாகன ஓட்டிகளுக்கு காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், நன்றி தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று உத்தரவிட்டார்.இதன்படி, மேற்கண்ட காவல் எல்லைக்கு உட்பட்ட அனைத்து முக்கிய சாலைகளிலும் நேற்று போக்குவரத்து பிரிவு போலீசார், முக கவசம் அணிந்துசெல்லும் வாகன ஓட்டிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.

அத்துடன் அவர்களது வாகனங்களில் முகப்பு பகுதியில், ‘’மாஸ்க் அணிந்து வந்ததற்கு நன்றி’’ என்ற வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கரை ஒட்டினர். இவ்வாறாக பைக், கார் மற்றும் ஆட்டோ உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டி வாகன ஓட்டுனர்களுக்கு போலீசார் நன்றி தெரிவித்தனர். அப்போது போலீசார், ‘கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் தொடர்ந்து முக கவசம் அணியவேண்டும். உங்கள் குடும்பத்தினர் வீட்டைவிட்டு வெளியே செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து செல்ல வலியுறுத்துங்கள்’ என்று கேட்டுக்கொண்டனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்கினர்.

Related Stories: