×

கோவை அருகே குடோனில் புகுந்த சிறுத்தையை பிடிக்கும் பணி 2வது நாளாக தீவிரம்

கோவை: கோவை அருகே தனியார் குடோனில் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் 2வது நாளாக வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் உள்ள தன்னாசி ஆண்டவர் கோயில், கோலமாவு மலைப்பகுதியில் கடந்த  டிசம்பர் மாதம் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. சிறுத்தையை கண்காணிக்க வனத்துறை சார்பில் 4 இடங்களில் கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டது. ஆனால், சிறுத்தை சிக்கவில்லை. டிசம்பர் மாத இறுதியில் சுகுணாபுரத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இது அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

அப்பகுதி மக்கள் வேண்டுகோளை அடுத்து சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டது. 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. இருப்பினும், சிறுத்தை கூண்டில் சிக்கவில்லை. இந்நிலையில் நேற்று குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் குடோனில் சிறுத்தை பதுங்கி இருந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர் குடோனில் சென்று பார்த்த போது சிறுத்தை அங்கு இருப்பதை உறுதி செய்தனர். இதை அடுத்து வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து குடோன் முழுவதும் இருந்த ஓடுகளில் வலை விரித்தனர்.

மேலும் குடோனில் இருந்து வெளியேறி செல்லும் 2 வழிகளிலும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்தனர். மேலும் சிறுத்தை தப்பி செல்லாமல் இருக்க குடோன் முழுவதும் வலையால் மூடியிருந்தனர். இதற்கிடையே வனத்துறையினர் தகவலின் பேரில் கால்நடை மருத்துவர் சுகுமாரன் உள்ளிட்ட குழுவினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க முடியுமா? என ஆய்வு செய்தனர். ஆனால், சிறுத்தை இருக்கும் பகுதியில் மயக்க ஊசி செலுத்துவதில் சிக்கல் இருந்தது. இதனால், சிறுத்தை தானாக கூண்டில் சிக்கும் வரை காத்திருக்கலாம் என அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து,  கூண்டில் சிறுத்தை சிக்குமா? என இரவு முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் வனத்துறை அதிகாரிகள், வன ஆர்வலர்கள் ஈடுபட்டனர்.

சிறுத்தை குடோனில் இருப்பது குறித்த தகவல் சுற்றுவட்டார பகுதிகளில் பரவியதையடுத்து, குடோனை சுற்றி இருந்த குடியிருப்புகளில் ஏராளமான பொதுமக்கள் சிறுத்தையை காண குவிந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அப்புறப்படுத்தினர். இந்நிலையில் 2வது நாளாக இன்று உதவி வனபாதுகாவலர், கோவை வனகால்நடை மருத்துவர்கள் சுகுமாரன், ராஜேஷ்குமார், மதுக்கரை மற்றும் கோவை வனச்சரக அலுவலகர்கள் ஆகியோர் கொண்ட குழுவினரால் களப்பணியாளர்களுடன் தொடர்து சிறுத்தையை கண்காணித்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Tags : Gudon ,Coimbatore , The task of catching the leopard that entered Gudon near Coimbatore has intensified for the 2nd day
× RELATED சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் மெட்ரோ...