×

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பொங்கலுக்குள் காவிரி குடிநீர் வழங்க பாலாற்றில் பைப்லைன் சீரமைப்பு பணிகள் தீவிரம்-மாதனூரில் மேற்பார்வை பொறியாளர் ஆய்வு

ஆம்பூர் : வரும் பொங்கலுக்குள் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் காவிரி குடிநீர் வினியோகத்தை துவக்க மாதனூரில் பாலாற்றில் பைப்லைன் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.  இதனை மேற்பார்வை பொறியாளர் ஆய்வு மேற்கொண்டார். கடந்த மாதம் பெய்த கனமழைகாரணமாக பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதில் அங்கு இருந்த குடியாத்தம் செல்லும் தரைப்பாலம் அடித்து செல்லபட்டது.

இதில் அங்கு பதிக்கப்பட்டிருந்த முக்கிய நீர் ஆதாரமாக விளங்கிய சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்த  காவிரி குடிநீர் பைப்லைன் இடம் பெயர்ந்தது. இதன் காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் காவிரி குடிநீர் வினியோகம் தடைபட்டது. இதனால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 5 பொக்லைன், 4 ஜேசிபி, 2 கிரேன் உதவியுடன் ஜெனரேட்டர்கள் பொருத்தி இந்த பைப்லைனை சீரமைக்க பாலாற்று வெள்ள நீரை திருப்பும் மற்றும் பைப்லைன் இணைத்து வெல்டிங் செய்யும் பணிகளும் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன.

இந்த பணிகளை நேற்று குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகர் ஆய்வு செய்தார். அப்போது, நிர்வாக பொறியாளர் ரவிசந்திரன், உதவி நிர்வாக பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர் மோகன் தாஸ், ஒப்பந்த மேற்பார்வையாளர் அன்பு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். வரும் பொங்கலுக்குள் காவிரி குடிநீர் வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட பகுதிகளுக்கு வினியோகம் செய்ய இரவு பகலாக பணிகள் மேற்கொள்ளபட்டு வருவதாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அடித்து செல்லப்பட்ட தரைப்பாலம் சீரமைப்பு பணிகள்

பாலாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலத்தை முரம்பு மண் கொட்டியும், மணல் மூட்டைகளை அடுக்கி, ராட்சத சிமென்ட் பைப் அமைத்து தரைப்பாலத்தை இணைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனால், இன்னும் ஒருசில நாட்களில் அப்பகுதியில் பாலாற்று தரைப்பாலத்தில் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : Palat ,Pongal ,Velur ,Ranipatta , Ambur: Cauvery drinking water supply to be started in Vellore and Ranipettai districts within the coming Pongal.
× RELATED சின்னம்மன் கோயிலில் வைகாசி பொங்கல் விழா