×

மக்களவை பாஜக கொறடா உட்பட மோடியின் எச்சரிக்கையை காற்றில் பறக்கவிட்ட 9 எம்பிக்கள்: கேள்விகளை எழுப்பிவிட்டு ‘எஸ்கேப்’ ஆவதால் அதிர்ச்சி

புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக எம்பிக்கள் சிலர் கலந்து கொள்ளாதது குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடி அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். அவையில் பங்கேற்காத உறுப்பினர்கள் தங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால், நாங்கள்  மாற்றங்களை செய்வோம் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று மக்களவையில் நிதி, கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர், சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட ஒன்பது துறைகள் தொடர்பாக 20 கேள்விகள் பட்டியலிடப்பட்டன.

மேற்கண்ட துறை ரீதியாக கேள்விகளை எழுத்துப்பூர்வமாக கேட்டிருந்த 9 பாஜக எம்பிக்கள், பட்டியலிடப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் அவையில் இல்லை. அதனால் அவையில் 14 கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மக்களவை பாஜக கொறடா ராகேஷ் சிங் கூறுகையில், ‘பாஜக எம்பிக்கள் அவைக்கு வராத அல்லது இல்லாத விவகாரத்தை கட்சி தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. முக்கியமான மசோதா விவாதத்திற்கு வரும்போது மட்டும் உறுப்பினர்கள் அவைக்கு வருகிறார்கள்.

எல்லா நேரத்திலும் உறுப்பினர்கள் அவையில் இருக்க வேண்டும் என்பது உண்மைதான்; அதற்காகத்தான் மக்கள் அவர்களை தேர்ந்தெடுத்துள்ளனர். பிரதமர் மோடி சமீபத்தில் எம்பிக்களுடன் பேசுகையில் அவையில் உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். நாங்கள் அதை கண்காணித்து வருகிறோம். எந்தெந்த எம்பிக்கள் கேள்வி நேரத்தில் வெளியேறினார்கள் என்பதை அவர்களின் வருகை பதிவை ஆய்வு ெசய்து நடவடிக்கை எடுப்போம்’ என்றார். முன்னதாக கேள்வி நேரத்தின் போது கொறடா ராகேஷ் சிங்கும் அவையில் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘அவையில் நான் இருந்தேன். எனது பெயரை அழைக்கும் சற்று முன்பு சில வேலைகளுக்காக வெளியே சென்றேன். ஆனால், நான் உடனடியாக திரும்பி வந்துவிட்டேன். அதற்குள் எனக்கான கேள்வி எண் சென்றுவிட்டது. அவை சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், அவர் அவை விதிமுறைப்படி அனுமதிக்கப்படாது என்று கூறிவிட்டார். நடப்பு கூட்டத் தொடரில் நான் ஒருநாளும் ஆப்சென்ட் ஆகவில்லை’ என்றார். மோடியின் எச்சரிக்கையையும் மீறி பாஜக எம்பிக்கள் சிலர் அவையில் கலந்து கொள்ளாமல் டிமிக்கி கொடுத்து வருவது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Modi ,Lok Sabha ,BJP ,Korada , 9 MPs who flew Modi's warning, including Lok Sabha BJP's Korada: shocked by questions and 'escape'
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...