Medical Trends

நன்றி குங்குமம் டாக்டர்

தூங்கும் நேரத்தை ஒழுங்கமையுங்கள்

ஒரு திடமான, வழக்கமான படுக்கை நேரமானது உங்கள் செயல்பாடுகளை மாற்றி அமைக்கக்கூடியதாக இருக்கிறது. உங்களுடைய உடலானது சூரிய உதயம், சூரிய மறைவு போன்றவற்றினை அடிப்படையாகக் கொண்டு இயங்கக்கூடியதாக இருக்கிறது. இதற்கேற்ப உங்களுடைய தினசரி வேலைகள் மற்றும் தூக்கம்  போன்றவற்றை அமைத்திருந்தால், ஒரு நாள் பொழுதை எப்போது தொடங்கி, எப்போது முடிக்க வேண்டும் என்பதை உங்கள் உடலே அறிந்துகொண்டு அதன்படி செயல்படும்

வாசிப்பு வைத்தியம்

உங்களுக்கு வயதாகும்போது மனம் தடுமாறத் தொடங்கி நினைவுகள் மங்கத் தொடங்குகின்றன. தாமதத்தை சரிசெய்யவோ அல்லது அதை தலைகீழாக மாற்றுவதற்கோ உதவும் வழிகளில் ஒன்றாக இருக்கிறது வாசிப்பு  பழக்கம். அது மனதை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வதற்கு உதவுகிற ஒரு எளிதான மற்றும் சுவாரஸ்யமான வழியாக இருக்கிறது.

இதயத்துக்கு 30 நிமிடம்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழக்கமான உடற்பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது   நுரையீரல் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானதாக இருக்கிறது. உடலில் உள்ள மிக முக்கியமான  இந்த இரண்டு உறுப்புகளையும் நல்ல முறையில் வைத்திருக்க விரும்பினால் இதய ஆரோக்கியத்திற்கான  உடற்பயிற்சிகளுக்கு ஒவ்வொருநாளும் சராசரியாக 30 நிமிடங்கள் ஒதுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

கட்டிப்பிடித்து அரவணைத்தால்...

ஒரு நாளைக்கு உயிர் பிழைத்திருக்க 4 முறை, உடல் பராமரிப்புக்காக 8 முறை, நமது  வளர்ச்சிக்கு 12 முறை என்று அதிக முறை நீண்ட நேரம் கட்டிப்பிடித்து அரவணைப்பது நமக்கு தேவைப்படுகிறது என்கிறார்  மனநல மருத்துவர் வர்ஜீனியர் சாடிர். நம் உடலுக்கு உகந்த அளவிலான ஆக்ஸிடோசின் ஹார்மோனை வெளியிடுவதற்கு கட்டிப்பிடித்து அரவணைப்பது மிகவும் உதவியாக இருக்கிறது.

விருப்பமானதை செய்யுங்கள்!

உங்கள் மனதை ஆக்கிரமித்து, சுறுசுறுப்பாக வைத்திருப்பதற்கு உங்கள்  மனதிற்கு விருப்பமான ஏதாவது ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடுவது அவசியம். நுணுக்கமான ஒன்றை வடிவமைத்து உருவாக்குவது அல்லது காட்டில் வேட்டைக்குச் சென்று உங்களுக்கு பிடித்ததை சேகரிப்பது போன்று உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு பொழுதுபோக்கில் ஈடுபடுவது கண்கள், மூளை போன்ற உறுப்புகளை திறன்பட செயல்பட வைக்கிறது. உங்களுக்கு பிடித்த ஏதாவதொரு சவாலான பொழுதுபோக்கில் ஈடுபடுவது மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

சிறப்பான மாதுளை

உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்பு மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்ஸ்  போன்றவற்றைப் பெற்றுள்ளதால் இந்தப் பழம் சிறப்பான உணவுகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இது உயர் ரத்த  அழுத்தம், சில புற்றுநோய்கள், இதயநோய் மற்றும் வீக்கம் போன்ற பிரச்னைகளை எதிர்த்துப் போராட உதவுகின்றன.

மனநலம் காக்கும் புதிர்கள்

தர்க்கம் சார்ந்த புதிர்கள், சுடோகு போன்றவை அறிவுத்திறனை வளர்க்கும். அத்துடன் வயதான காலத்தில் ஏற்படுகிற மனநலப் பிரச்னைகளையும் மெதுவாகத் தடுக்கிறது.

போதைப்பொருளும் சர்க்கரையும் ஒன்றுதான்!

அதிக போதை தரக்கூடிய போதைப் பொருட்களை உட்கொள்ளும்போது எப்படி மூளை எதிர்வினையாற்றுகிறதோ அதேபோல்தான் சர்க்கரையை உட்கொள்ளும்போதும் மூளை செயல்படுகிறது. இன்சுலின் ஹார்மோன் சுரத்தலில் ஏற்படும் குறைபாட்டால் ரத்தத்தில் உண்டாகிற நிலையற்ற சர்க்கரை அளவு உடல் எடை அதிகரிப்பு முதல் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கும் காரணமாகிறது.

நம்பிக்கை என்னும் சிகிச்சை!

நம்பிக்கை உடையவர்களை பார்க்கும்போதே உங்களுக்கு தெரியும். நம்பிக்கை உடையவர்கள் பெரும்பாலும்  நன்றாக உடையணிந்து, சிறந்த தோரணையுடன், உயரமாக நடந்துகொள்வதோடு, நம்பிக்கையான ஒரு மனநிலையைக்  கொண்டிருப்பார்கள். நம்பிக்கையுள்ளவர்கள் மகிழ்ச்சியாகவும், குறைவான அழுத்தத்துடனும், அதிக வெற்றிகரமாகவும் உள்ளனர். தினசரி சிறிய இலக்குகளை நீங்களே அமைத்துக்கொண்டு அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் சுயமரியாதையை வளர்த்துக் கொள்ளலாம்.

சமூகத்தோடு இணைந்து வாழுங்கள்!

மனிதர்கள் சமூக உயிரினங்களாக கருதப்படுகிறார்கள். தனியாக இருக்க விரும்புவதாக சொல்பவர்களைக்கூட நல்ல நண்பர்கள், சக பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுற்றியிருந்து பேசி, சந்தோஷமாக வைத்திருக்க முயற்சித்தால் அது அவர்களுடைய மன அழுத்தத்தைக் குறைக்க வழிவகுக்கும்.

ஓடி விளையாடு பாப்பா

உங்கள் குழந்தைகள் மிக உயரிய வேலை வாய்ப்பு பெற வேண்டுமா... அவர்களை அதிகம் விளையாட விடுங்கள். எதிர்கால வேலைகளுக்கு படைப்பாற்றல், உணர்ச்சி நுண்ணறிவு, சிக்கல்களை தீர்க்கும் பணியாளர்கள் நிறைய தேவை. விளையாட்டு நேரமே இந்த அனைத்து திறன்களையும், பணியிடத்தில் தன்னை தக்க வைத்துக் கொள்வதற்கான திறமையையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க முடியும்.

‘அரசு, பள்ளி நிர்வாகம், பெற்றோர் என அனைத்து தரப்பும் இணைந்து குழந்தைகளுக்கான விளையாட்டு நேரத்தை அதிகரிக்கும் திட்டத்தை உருவாக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் மாபெரும் தலைவர்கள் கிடைப்பார்கள்’ என்கிறார் பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான பீட்டர் கிரே.

நீர்ச்சத்தின் அவசியம்

நமது உடல் 70 சதவிகிதம் நீரால் ஆனது, மூளை 90 சதவிகிதம் நீரால் ஆனது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடல் சரியாக செயல்பட உதவியாக இருக்கிறது. நீர் நச்சுக்களை வெளியேற்றவும், எடையைக்  குறைக்கவும் உதவுகிறது. மேலும் இது தலைவலியை எதிர்த்துப் போராடவும், நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

அதிகமானால் ஆபத்து

சூரிய ஒளி பல அற்புதமான நன்மைகளைக் கொண்டுள்ளது. ஆனால், அதுவே அளவுக்கு அதிகமாகிறபோது பல்வேறு உடல்நல பிரச்னைகளையும் உண்டாக்குகிறது. சூரிய ஒளியிலுள்ள புற ஊதாக் கதிர்கள் சருமத்தை கடினமாகவும், கருமையாகவும் மாற்றுவதோடு தோலில் புள்ளிகள் உண்டாகவும் காரணமாகிறது. வாழ்நாள் முழுவதும் உடலில் அதிக அளவில் சூரிய ஒளி படும்போது அது தோல் புற்றுநோய்கள் உருவாக காரணமாகிறது. எனவே, உடலில் அதிக அளவு வெயில் படுவதைத் தவிர்க்க நிழல்களில் ஒதுங்கி இருப்பதோடு, உங்களை பாதுகாத்துக்கொள்ள சன்ஸ்கிரீன் அணிந்து கொள்வது நல்லது.

நல்லது செய்யும் நட்ஸ்

நட்ஸ் என்கிற கொட்டை வகை உணவுப் பொருட்கள் பல்வேறு நன்மைகளைத் தருபவை. அவை ஒவ்வொன்றும் தனித்தனியான ஆரோக்கிய பலன்களுக்குரிய பட்டியலைப் பெற்றிருக்கிறது. அவை மன அழுத்தத்தைத் தணிக்கவும், எடை குறைப்பிற்கும் உதவுகின்றன. இவை புரதம் மற்றும் பிற முக்கிய ஊட்டச்சத்துக்களைப் பெற்றுள்ளதோடு, இதய ஆரோக்கியத்திற்கும் உதவுகின்றன.

தொகுப்பு : குங்குமம் டாக்டர் டீம்

Tags :
× RELATED Medical Trends