×

நெடுஞ்சாலை துறை பொறியாளர்களுக்கு 'சாலை பாதுகாப்பு பொறியியல்'என்ற தொடர் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு

சென்னை: விபத்தில்லாத தமிழகத்தை உருவாக்க நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் கரம் கோர்க்க வேண்டும் என சாலைப்பாதுகாப்பு பொறியாளர்கள் பயிற்சி முகாமில் அமைச்சர் எ.வ.வேலு பேசியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை துறை ஆராய்ச்சி நிலையம் வளாக அரங்கில், நெடுஞ்சாலை துறை பொறியாளர்களுக்கு, சாலை பாதுகாப்பு பொறியியல் தொடர் பயிற்சியை முகாமை அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் நெடுஞ்சாலைத்துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார், சென்னை ஐ.ஐ.டி பேராசிரியர். முனைவர் வீரராகவன், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குநர் பா.கணேசன், நெடுஞ்சாலை ஆராய்ச்சி இயக்குநர் கோதண்டராமன், தேசிய நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நெடுஞ்சாலை ஆராய்ச்சி இயக்குநர் கோதண்டராமன் பேசுகையில், முதலமைச்சரின் ஆணைக்கேற்ப விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் அமைச்சர் எ.வ.வேலு சாலை பாதுகாப்பு குறித்து அனைத்து தரப்பினர் கருத்து கேட்டு சாலை பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தி வருகிறார். தமிழகத்தில் சாலை விபத்துகள் அதிகம் ஏற்படும் மாவட்டமாக செங்கல்பட்டு உள்ளது. நேற்று செங்கல்பட்டில் சாலைப்பாதுகாப்பு குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் அனைத்து தரப்பினர் கருத்தை கேட்டு அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார். விபத்தில்லா தமிழகத்தை உருவாக்கும் வகையில் சாலைப் பாதுகாப்பு பொறியியல் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து விபத்தில் தமிழகத்தை உருவாக்க அமைச்சர் எ.வ.வேலு முயற்சித்து வருகிறார் என பேசினார்.

அதனை தொடர்ந்து பேசிய சாலை மேம்பாட்டு திட்டத்தின் இயக்குநர் கணேசன், விபத்து நடைபெற்ற இடங்களில் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆவணங்களாக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்துகளை தடுக்கும் விதமாக தனி பிரிவு உருவாக்கப்பட்டு விபத்து நடைபெறும் இடங்களை குறித்து சாலை விபத்துகள் அதிகம் ஏற்படும் பகுதியாக கண்டறியும் பணி நடைபெறுகிறது. நெடுஞ்சாலை, மருத்துவம் , போக்குவரத்து, காவல்துறை உள்ளிட்ட 5 துறைகளுடன் மாவட்ட வாரியாக அமைச்சர் எ.வ. வேலு ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார் என தெரிவித்தார்.

இவ்விழாவில் உரையாற்றிய இந்திய தொழில்நுட்ப கழக பேராசிரியர் முனைவர் வீரராகவன், சாலை விபத்துகளை தடுப்பதற்கு தமிழக அரசு எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது என்றும் இந்தியாவில் அதிக விபத்து ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு அறிக்கையின் படி 10525 பேர் தமிழகத்தில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து அதிகம் ஏற்படும் இடங்களில் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் உயிரிழக்கின்றனர். அதிவேகமாக செல்வது விபத்து ஏற்படுத்துவதில் முக்கியத்துவம் வகிக்கிறது. தமிழகத்தில் சாலைகள் தரம் நன்றாக உள்ளதால் வேகமாக செல்கின்றனர். எனசே வேகமாக செல்பவர்களை கட்டுப்படுத்தினால் மற்றும் சாலைகளில் உயர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

5 விபத்து ஏற்பட்ட பிறகு அந்த இடத்தை விபத்து பகுதியாக அறிவிப்பதை விட 1 விபத்து நடைபெறும் போதே அந்த இடத்தில் சாலைகளின் வடிவமைப்பு மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்கூட்டியே ண்டறிய வேண்டும் என அறிவுறுத்தல். பெரும்பாலும் சாலை பணிகள் மேற்கொள்ளும் போது, சாலைகள் சந்திப்புகள் உள்ளிட்ட இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. சாலை விரிவாக்கம் செய்யும்போது முறையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார். சாலை விபத்துகளை தடுக்கும் விதமாக சாலை பாதுகாப்பு பயிற்சி முகாமில் செய்முறையாக பொறியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும் என பேசினார்.

பின்னர் உரையாற்றிய நெடுஞ்சாலைத்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ் குமார், சாலை பாதுகாப்பிற்கு தமிழக அரசு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் சாலை பாதுகாப்பு தொடர்புடைய துறைகளை அழைத்து முதலமைச்சர் ஆலோசனை நடைபெற்றது. விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைகளில் சேர்ப்பவர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கும் விதமாக இன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தை தமிழக அரசு விரைவில் தொடங்கவுள்ளது. சாலை விபத்துகள் தடுக்க காவல்துறை, நெடுஞ்சாலை, போக்குவரத்து, சுகாதரம், கல்வித்துறையினருக்கு சாலை விபத்துகளை தடுப்பதில் மிகப்பெரிய பங்கு உள்ளது. அனைத்து தரப்பினரும் இணைந்து பணிபுரிந்தால் சாலை பாதுகாப்பு பயிற்சியில் பலனை கொண்டு வர முடியும். என பேசினார்.

சாலைகள் வடிவமைப்புகளை சரியான முறையில் வடிவமைக்க பொறியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகம் நடைபெறுகிறது. விபத்துகளை தடுக்கும் விதமாக நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களுக்கு சாலை பாதுகாப்பு பொறியியல் தொடர் சிறப்புப் பயிற்சி தொடங்கியுள்ளது. சாலை பாதுகாப்பு பொதுமக்களின் உயிரை காப்பாற்றும் என்பதால் பொறியாளர்கள் இங்கு எடுத்துக்கொள்ளும் பயிற்சியை முக்கியத்துவம் அளித்து நடைமுறைப்படுத்த வேண்டும் என பேசினார்.

விழாவில் சிறப்புரையாற்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் சாலை பாதுகாப்பு பயிற்சியை பெற்ற பிறகு பொறியாளர்கள் தங்களுடைய கோட்டத்தில் இந்த பயிற்சி முகாமில் கற்றுக்கொண்டவைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். விபத்து ஏற்பட்ட பிறகுதான் மருத்துவர்கள் காப்பாற்றுவார்கள், ஆனால் விபத்தே ஏற்படாதவாறு காப்பாற்றுபவர்கள் பொறியாளர்கள் என பேசினார்.

சென்னை ஐ.ஐ.டி வல்லுநர்களுடன் பேராசிரியர் வீரராகவன் வைத்து சாலை பாதுகாப்பு பொறியாளர்கள் பயிற்சி மேற்கொள்ளப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளில் சாலை விபத்துகளில் உயிரிழக்கும் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது தலைகுனிவு என்றும் தமிழகத்தில் விபத்துகளை தடுக்கும் விதமாக முதலமைச்சர் ஆணையிட்டதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களுக்கு சென்று சாலை விபத்துகளை ஆலோசனை மேற்கொண்டு வருகிறோம்.

2020-ம் ஆண்டும் மாநில குற்றப்பிரிவு ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி ஏற்பட்ட 45489 விபத்துகளில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8060 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 80% மேற்ப்பட்ட விபத்துகள் ஓட்டுநர்கள் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் போக்குவரத்து குறைவாக இருந்த சமயத்திலே இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது வேதனையானது என தெரிவித்தார்.

சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் விதமாக பொறியாளர்கள் இந்த பயிற்சி முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஸ்வீடன் நாட்டில் சாலை விபத்துகள் நடைபெறுவதில்லை. அதுபோன்று விபத்து ஏற்படாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். விபத்தில்லாத தமிழகத்தை உருவாக்க நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் கரம் கோர்க்க வேண்டும் என கூறினார்.

சாலைகளில் அமைக்கப்பட வேண்டிய எச்சரிக்கை சின்னங்களை பொறியாளர்கள் புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். பொறியாளர்கள் பயிற்சியில் பெற்ற அனுபவங்களை கடைநிலை ஊழியர் வரை கற்றுத்தர வேண்டும். சாலைகள் அமைக்கும் போது சாலை பாதுகாப்பிற்காக பயன்படுத்தும் போது தரமற்ற பொருட்களை பயன்படுத்த பொறியாளர்கள் அனுமதிக்க கூடாது.

முத்தமிழறிஞர் கலைஞர் தொடங்கி வைத்த 108 ஆம்புலன்ஸ் சேவைகளை வந்த பிறகுதான் விபத்தில் சிக்கிய பல உயிர்களை காப்பாற்ற முடிந்தது. விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் விதமாக, இன்னுயிர் காப்போம் நம்மையும் காப்போம் 48 என்ற திட்டம் குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் எ.வ.வேலு குறிப்பிட்டுள்ளார்.

Tags : Department of Highway ,Minister ,AH. V.V Velu , E.V.Velu
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி