×

ஆந்திரா, கர்நாடகாவை தொடர்ந்து கேரளாவிலும் ஒமிக்ரான் பரவியது: நாடு முழுவதும் இதுவரை 38 பேருக்கு தொற்று உறுதி

புதுடெல்லி: ஆந்திரா, கர்நாடகாவை தொடர்ந்து லண்டனில் இருந்து கேரளா வந்தவருக்கு ஒமிக்ரான் கண்டறியப்பட்டதால் அம்மாநிலத்திலும் புதிய வகை வைரஸ் பரவியுள்ளது. இதையடுத்து இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு மொத்தம் 38 ஆக அதிகரித்துள்ளது. தென்ஆப்ரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தற்போது 59நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கொரோனாவிலிருந்து பல்வேறு மாறுபாடுகளை கொண்டு உருமாறியுள்ள இந்த புதிய வகை வைரஸ் இந்தியாவிலும் நுழைந்து நாளுக்கு நாள் பாதிப்பை அதிகப்படுத்தி வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிராவில் இதுவரை 18 பேர் ஒமிக்ரான் வைரசுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 3 பேர், குஜராத் 3 பேர், கர்நாடகாவில் 3 பேர் என்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடிய வைரஸ் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  

இந்நிலையில், கடந்த 6ம் தேதி லண்டனிலிருந்து அபுதாபி வழியாக கொச்சி வந்த ஒருவருக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. முதல் கட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என தெரியவந்தது. ஆனாலும் கூடுதல் பரிசோதனைக்காக அவரது உமிழ் நீர் மாதிரி திருவனந்தபுரம் மற்றும் டெல்லியில் உள்ள பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 8ம் தேதி அவருக்கு மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த பரிசோதனை முடிவு நேற்று வெளியானது. இதில் அவருக்கு ஒமிக்ரான் வைரஸ்  பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் உடனடியாக கொச்சியிலுள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே அவரது மனைவிக்கும், தாய்க்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், ‘கடந்த 6ம் தேதி இங்கிலாந்தில் இருந்து அபுதாபி வழியாக கொச்சி வந்த ஒரு பயணிக்கு ஒமிக்ரான்  வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை  திருப்திகரமாக உள்ளது. அவரது மனைவி மற்றும் தாய்க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். ஒமிக்ரான் வைரஸ் பரவியுள்ள நபருடன் விமானத்தில் வந்த அனைவருக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்’ என்றார்.

கேரளாவில் ஏற்கனவே கொரோனா பரவல் இன்னும் குறையாத நிலையில் ஒமிக்ரான் வைரசும் பரவியுள்ளது மேலும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், இத்தாலியை சேர்ந்த 20 வயது நபர் கடந்த நவம்பர் 22ம் தேதி பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக வந்துள்ளார். இவர் பீபைசர் கொரோனா தடுப்பூசியை முழுவதுமாக செலுத்திக்கொண்டவர். இந்நிலையில் டிசம்பர் ஒன்றாம் தேதி பரிசோதனையில் இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனை தொடர்ந்து அவரை  தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  

தற்போது அவருக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படும் முதல் நபர் இவராவார். இவருடன் தொடர்பில் இருந்த 7 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல் ஆந்திர மாநிலத்தில் அயர்லாந்தில் இருந்து திரும்பியவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் விசாகப்பட்டினத்தில் இருக்கிறார். கர்நாடகாவில் நேற்று மூன்றாவது ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தென்னாப்பிரிக்காவில் இருந்து கர்நாடகாவிற்கு வந்த 34 வயது நபருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது அரசு மருத்துவமனையில் சிறப்பு வார்டில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. நாக்பூரில் 40 வயதுடைய ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது. இவரும் தென்ஆப்ரிக்காவில் இருந்து இந்தியா வந்தவர் என்று தெரியவந்துள்ளது. டெல்லி, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத் மாநிலங்களில் புதிய ஒமிக்ரான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

ஒமிக்ரான் பட்டியல்
மகாராஷ்டிரா    18
ராஜஸ்தான்    9
டெல்லி    2
குஜராத்    3
ஆந்திரா    1
கர்நாடகா    3
சண்டிகர்    1
கேரளா    1

* புதிய கருவி ஐசிஎம்ஆர் கண்டுபிடிப்பு
ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை 2 மணி நேரத்தில் கண்டறியும் புதிய கருவியை ஐசிஎம்ஆர் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது குறித்து அறிவியல் நிபுணர் டாக்டர் பிஸ்வஜோதி கூறுகையில், ‘ஆர்டிபிசிஆர் கருவியுடன் இணைந்த புதிய பரிசோதனைக் கருவியை கண்டு பிடித்துள்ளோம். இதன் மூலம் ஒமிக்ரான் பாதிப்பு 2 மணி நேரத்தில் பரிசோதனை மூலம் கண்டறியப்படும்’ என்றார்.

Tags : Kerala ,Andhra Pradesh ,Karnataka , Omigran spreads to Kerala following Andhra Pradesh and Karnataka: 38 cases confirmed across the country so far
× RELATED புதுச்சேரி கடலில் தடையை மீறி குளித்த இளைஞர்களுக்கு நூதன தண்டனை