×

அதிக மரம் வெட்டினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும்: புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில் வனப்பகுதியில் மரம் வெட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை..!!

சென்னை: புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில் வனப்பகுதியில் மரம் வெட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. தமிழநாடு மற்றும் புதுச்சேரி எல்லையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள ஆரோவிலில் சர்வதேச நகரம் அமைக்கப்பட்டுள்ளது. ஆரோவில் நகரத்தில் பல்லாயிரக்கணக்கான மரங்கள் வளர்க்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கிரவுன் ரோடு எனப்படும் திட்டத்திற்கு சாலை அமைப்பதற்காக அங்குள்ள மரங்களை வெட்டும் பணியை சர்வதேச நகர வளர்ச்சிக்குழு மேற்கொண்டது. ஆரோவில் நகரத்தின் மைய பகுதியில் உள்ள மரங்களை நகர வளர்ச்சிக்குழு பொக்லைன் எந்திரங்களை கொண்டு வெட்டியதை அறிந்த அப்பகுதி குடியிருப்பு வாசிகள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒன்றிய அரசின் திட்டத்தை அனுமதிக்க முடியாது என்றும் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்போவதாகவும் ஆரோவில் குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். எதிர்ப்பையும் மீறி மரங்களை வெட்டுவதில் ஒன்றிய அரசு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர். இதுகுறித்து தமிழக அரசு தலையிட்டு தடுத்து நிறுத்த ஆரோவில் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில்  புதுச்சேரி அருகில் உள்ள ஆரோவில் வனப்பகுதியில் மரம் வெட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. ஆரோவில் வனப்பகுதியில் அதிகளவில் மரங்களை வெட்டுவது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தனது உத்தரவில் குறிப்பிட்டிருக்கிறது.


Tags : National Green Tribunal ,Auroville ,Pondicherry , Pondicherry, Auroville Forest, Tree, National Green Tribunal
× RELATED வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய பகுதிகளில்...