×

7 பேர் விடுதலை தொடர்பான தீர்மானத்தின் மீது ஆளுநர் ஒப்புதல் இல்லாமல் விடுதலை செய்யக்கோரி நளினி மனு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன் உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்ய 2018 செப்டம்பர் 9ம் தேதி தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, 2018 செப்டம்பர் 1ம் தேதி தீர்மானம் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதன் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காததால், தீர்மானம் நிறைவேற்றிய மறுநாள் முதல் தன்னை சட்டவிரோதமாக சிறையில் அடைத்து வைத்திருப்பதாகவும், தன்னை விடுதலை செய்ய வேண்டுமெனவும் கூறி நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவுக்கு பதிலளித்து தமிழக உள்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அமைச்சரவை தீர்மானம் தொடர்பாக பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில்  ஒன்றிய உள்துறை அமைச்சகம் பதில்மனு தாக்கல் செய்துள்ளது. அதில், தண்டனை குறைப்பு தொடர்பாக குடியரசு தலைவர் தான் முடிவெடுக்க தகுதியானவர் என்று கூறி ஆளுநர் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அதை ஒன்றிய அரசு சட்டப்படி பரிசீலிக்கும் எனக் கூறியிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆளுநரின் செயல்பாடு உச்ச நீதிமன்ற அவமதிப்பு செயல் எனவும், ஆளுநர் ஒப்புதல் இல்லாமலும் தண்டனைக் குறைப்பு வழங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும் நளினி தரப்பு வக்கீல் வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல், இதே வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக உள்ள பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் டிசம்பர் 7ம் தேதி விசாரணைக்கு வருகிறது என்றார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை மனுதாரர் தரப்பு தாக்கல் செய்ய வேண்டும். கூடுதல் பதில்மனுவை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு  விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

இதேபோல, முன்கூட்டியே விடுதலை கோரி இந்த வழக்கில் ஆயுள் கைதியாக உள்ள ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவுக்கு 3 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்யுமாறு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுகுறித்து அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் கூறும்போது, 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை அமல்படுத்துவதில் ஆளுநர் தரப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. அதற்கு பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஏழு பேர் விடுதலை தொடர்பாக எங்களுக்கு எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழக அரசின் நிலைப்பாடும் அதுதான். விடுதலை உத்தரவில் இறுதியில் ஆளுநர்தான் கையெழுத்திட வேண்டும் என்ற நிலை உள்ளது என்றார்.

Tags : Nalini ,Governor ,Court , Nalini's petition seeking release of 7 persons without the approval of the Governor on the resolution relating to their release: Adjournment of hearing in the High Court
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...