×

விழுப்புரம் அருகே நாட்டு பட்டாசு வெடித்து சிதறி சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழப்பு: பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தில் நாட்டு பட்டாசு வெடித்து 10 வயது சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் கூனிமேடு பகுதியை சேர்ந்த கலைநேசன் என்பவர் புதுச்சேரி அரிஞான்குப்பம் பகுதியில் இருந்து நாட்டு பட்டாசுகளை வாங்கி கொண்டு தமது 10 வயது மகன் பிரதீஷ் உடன் இருசக்கர வாகனத்தில் கோட்டகுப்பத்திற்கு திரும்பி கொண்டிருந்தார். சின்ன கோட்டகுப்பம் அருகே வந்த போது பலத்த சத்தத்துடன் அவரது இருசக்கர வாகனம் வெடித்து சிதறியது. இதுகுறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வெடிவிபத்தில் கலைநேசனும் அவரது மகனும் நிகழ்விடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர். கலைநேசன் வாகனம் அருகே மற்றொரு வாகனத்தில் வந்தவர் தூக்கி வீசப்பட்டதுடன் வாகனமும் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் அங்கே நிறுத்தப்பட்டிருந்த லாரியின் முன்பக்க கண்ணாடிகளும் நொறுங்கின. தகவல் அறிந்து அங்கு சென்ற கோட்டகுப்பம் போலீசார், உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நிகழ்விடத்தில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா விபத்து குறித்து விசாரணை நடத்தினார். பலத்த சத்தத்துடன் நாட்டு பட்டாசுகள் வெடித்ததால் நாட்டு வெடிகுண்டாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. உயிரிழந்த கலைநேசன் நாட்டு பட்டாசுகளை புதுச்சேரியில் இருந்து வாங்கி வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசாரணை நடத்திய போலீசார் தெரிவித்தனர்.


Tags : Vetapuram , Villupuram, country firecrackers, 2 killed
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி