×

வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து; தீர்ப்பை மறுபரிசீலனை செய்க: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை : வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீடு ரத்து செய்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து தேமுதிக தலைவர், பொதுச் செயலாளர்‌ விஜயகாந்த்‌ இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மிகவும்‌ பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான 20 சதவீத ஒதுக்கீட்டில்‌, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீடு வழங்கி, கடந்த அதிமுக ஆட்சியில்‌ சட்டம்‌ இயற்றப்பட்டது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில்,‌ சாதிவாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும்‌ எனக் கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றம்‌ ரத்து செய்துள்ளது.

தேர்தலுக்காகவும்‌, கூட்டணிக்காகவும்‌ மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதாகத் தேர்தலுக்கு முன்பே நான்‌ சொன்னது தற்போது உண்மையாகியுள்ளது. இருப்பினும்‌ 10.5 சதவீத உள்‌ ஒதுக்கீட்டை நீதிமன்றம்‌ ரத்து செய்திருப்பது வன்னிய சமூக மக்களுக்குப் பெரும்‌ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, இட ஒதுக்கீடு விவகாரத்தில்‌ வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரீசிலனை செய்து, அனைத்துத் தரப்பு மக்களும்‌ பயனடையும்‌ வகையில்‌ தீர்ப்பு வழங்க வேண்டும்‌’’.

இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Vannier ,Vijayakand , உள்‌ ஒதுக்கீடு
× RELATED பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பாதை...