தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வழக்கு: தீர்ப்பை ஒத்தி வைத்தது ஐகோர்ட்

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு கடந்த 2019 ஜூன் மாதம் நடந்த தேர்தலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி,  சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமனம் செல்லும் என்றும் தீர்ப்பளித்தார். மேலும், மூன்று மாதத்தில் புதிதாக தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்தும் 2020 ஜனவரியில் உத்தரவிட்டார்.  இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தேர்தல் செல்லாது என்று அறிவித்து மூன்று மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தது.

இந்த வழக்கு  நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமர்வு முன்பு கடந்த வாரம் விசராணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஓம்.பிரகாஷ் மற்றும் கபீர், கடந்த 2019 ஜூன் 23ம் தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அனைத்து வாக்கு பெட்டிகளும் வங்கி லாக்கரில் பாதுக்காப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள வாக்குகளை எண்ணி முடிவை அறிவிக்க உத்தரவிட வேண்டும். என்று வாதிட்டார். அப்போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முக சுந்தரம், சிறப்பு அதிகாரி கீதாவின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் பணியை மட்டுமே மேற்கொண்டு வருகிறார் என்றார்.

வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சங்க உறுப்பினர் ஏழுமலை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜேஷ், நடிகர் சங்க தேர்தல் நடத்தப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது. சங்க உறுப்பினர்களின் இறுதி பட்டியலை உறுதிப்படுத்தவில்லை. சென்னை மாவட்ட பதிவாளர் தயார் செய்த உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடவும், வாக்களிக்கவும் வேண்டும். எனவே நடிகர் சங்க உறுப்பினர்களின் பட்டியலை இறுதி செய்து புதிதாக தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

Related Stories:

More