×

'மும்பை சொகுசு கப்பலில் நடைபெற்ற போதைப்பொருள் சோதனையே போலியானது'!: மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் குற்றச்சாட்டால் பரபரப்பு..!!

மும்பை: மும்பை சொகுசு கப்பலில் நடைபெற்ற போதைப்பொருள் சோதனையே போலியானது என மராட்டிய அமைச்சர் நவாப் மாலிக் குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ஷாருக்கான் மகன் கைது மோசடி என்றும் மாலிக் விமர்சனம் செய்துள்ளார். மும்பை சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 16 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களோடு பேசிய மராட்டிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் சோதனையின் போது பாஜக பிரமுகர்கள் மற்றும் தனியார் துப்பறியும் நிர்வாகி உடனிருந்தது எப்படி? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மும்பை போதைப்பொருள் சோதனையே போலியானது என்று குற்றம்சாட்டியுள்ள நவாப் மாலிக், தங்களது அடுத்த குறி ஷாருக்கான் என்று கடந்த ஒருமாதகாலமாகவே போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் செய்தியாளர்களிடம் கூறி வந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனிடையே போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கானுடன் சர்ச்சைக்குரிய தனியார் துப்பறியும் நிர்வாகி இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வழக்கில் கைது செய்யப்பட்ட அர்பாஸ் மெர்ச்சன்டை அழைத்து செல்லும் போலீசாருடன் பாஜக மாவட்ட நிர்வாகி இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விளக்கம் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விளக்கம் அளித்திருந்தாலும் மராட்டிய அமைச்சரே அந்த மாநில போலீசாரின் நடவடிக்கையை விமர்சித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலையீடு இல்லாமல் விசாரணை நடப்பதை போலீசார் உறுதிப்படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Mumbai ,Maratha ,minister ,Nawab Malik , Mumbai Luxury Ship, Drug Testing, Minister Nawab Malik
× RELATED மும்பையில் தனது குடும்பத்தினருடன்...