×

பெண்களுக்காக பெண்களே இயக்கும் பிங்க் டாக்சி

நன்றி குங்குமம் தோழி

சென்னையை அடுத்து ஐ.டி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளிகள், தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நகரம் கோவை. இந்த நகரம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என 2015ம் ஆண்டு, தேசிய குற்றப்பதிவு ஆவணம் வெளியிட்ட தகவலில் தெரிவித்திருந்தது.
ஆனால் சமீபகாலமாக இந்த நகரத்துக்கு அருகேயுள்ள பொள்ளாச்சியில் பெண்களை பலாத்காரம் செய்த சம்பவங்களால் அந்த நகரமே நடுங்கி கிடக்கிறது. பெண்கள் தனியாக இரவு நேரத்தில் வெளியே செல்ல அச்சப்படுகிறார்கள். குறிப்பாக வேலைப் பார்க்கும் பெண்கள்.

ஐ.டி துறையை பொறுத்தவரை அந்த நிறுவனமே அவர்களுக்கான வண்டியை ஏற்பாடு செய்து கொடுத்துவிடும். ஆனால் மற்ற நிறுவனங்கள் பெண்களுக்கான இந்த வசதியினை செய்து தருவதில்லை. குறிப்பாக சிறிய அளவில் செயல்படும் நிறுவனங்கள். மேலும் பெண்கள் வேலைக்கு மட்டும்தான் இப்போது வெளியே செல்வதில்லை.

நண்பர்களின் சந்திப்பு, ஷாப்பிங் அல்லது குடும்ப விழாக்களுக்கும் அவர்கள் வெளியே செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த சமயத்தில் கொஞ்சம் தாமதமானால்... அவர்களின் பாதுகாப்பிற்கான பயணத்துக்கு பெண் டிரைவர்கள் இயக்கும் டாக்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

‘பிங்க் டாக்சி’ என்ற பெயரில் இயக்கப்படும் இந்த டாக்சியில் பெண்களும், 10 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை மட்டுமே பயணத்துக்காக ஏற்றிச் செல்கின்றனர். ஓட்டுநர்கள் அனைவரும் பெண்கள் என்பதுடன் எட்டு மணி நேர பணி செய்தால் போதும். அதற்கு மேல் அவர்களாக விருப்பப்பட்டால் பணியைத் தொடரலாம். அதற்குத் தனி ஊதியம் உண்டு.

ஆண் ஓட்டுநர்களைவிட, இந்தப் பெண்களுக்கு அதிக ஊதியம் தரப்படுகிறது. தங்களது டாக்சி பெண்களுக்கு பாதுகாப்பானது என்பதற்கான காரணங்களை அடுக்குகிறார் ‘பிங்க் டாக்சி’ பொறுப்பாளர் சுகன்யா.

‘‘எங்கள் டாக்சியில் ‘பேனிக் பட்டன்’ என்ற அவசரகால வசதியை அறிமுகப்படுத்தியுள்ளோம். ஆபத்து காலங்களில், ஓட்டுநர் அந்த பட்டனை அழுத்தினால், எங்களது சர்வருக்கு தகவல் வந்துவிடும். உடனடியாக அவர்களது பிரச்னை என்னவென்று பார்த்து சரி செய்வோம். எங்களது நிறுவன ஆண் ஓட்டுநர்களும் இவர்களுக்கு உதவியாக இருக்கிறார்கள்.

24 மணி நேரமும் எங்கள் சேவை தொடர்கிறது. பகல் நேரத்தில் கிலோ மீட்டருக்கு ரூ.21.50 காசுகளும் இரவு நேரம் பயணிக்க கி.மீக்கு 23.50ம் வசூலிக்கிறோம். பெண் டிரைவர்கள் என்பதால் பயணம் செய்யும் பெண்கள் அச்சமின்றி பயணிக்கலாம். அத்துடன் பெண்களுக்கு சுயவேலைவாய்ப்பு வழங்கவே இந்த திட்டத்தை செயல்படுத்திவருகிறோம்’’ என்றார்.

பா.கோமதி

Tags : women ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...