×
Saravana Stores

ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்கும் வகையில் திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு மசோதா தயாராக உள்ளது: தமிழக அரசுக்கு ஐகோர்ட் பாராட்டு

சென்னை: தமிழகத்தில் ரவுடிகளையும், சமூக விரோதிகளையும் ஒழிக்கும் வகையில், வரைவு சட்ட முன்வடிவு விரைந்து தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக்கப்பட்டால் காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், சட்ட மசோதா தாக்கல் செய்ய உள்ளதாக அரசு தெரிவித்ததற்கு பாராட்டு தெரிவித்துள்ளது. சென்னை அயனாவரத்தில், இரு ரவுடி கும்பலுக்கு இடையில் நடந்த மோதலில், ஜோசப் என்ற ரவுடி வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட வேலு என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, தன்னை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து, அவர் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, ரவுடிகள், அரசியல்வாதிகள் என எல்லோரிடமும் சட்டவிரோத ஆயுதங்கள் உள்ளன. ரவுடிகளால் போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ரவுடிகளையும் சமூக விரோதிகளையும் ஒழிக்க கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தது. வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ரவுடிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான புதிய சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டு உள்துறை கூடுதல் செயலாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்று டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள். இந்த சட்ட முன்வடிவை சட்டமன்றத்தில் வைத்து புதிய சட்டம் எப்போது இயற்றப்படும் என்பது குறித்து பதிலளிக்குமாறு தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு சட்டம்” என்ற பெயரில் வரைவு மசோதா தயாராக உள்ளது. அடுத்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு சட்டமாக இயற்றப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், திட்டமிட்ட குற்றச்செயல்கள் தடுப்பு சட்ட வரைவு மசோதா தயாராக இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது பாராட்டுதற்குரியது. இது சட்டமாக இயற்றப்பட்டால் ரவுடிகளை கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : iCourt ,Tamil Nadu government , Planned Crime Prevention Bill is ready to eradicate rowdies and anti-socials: iCourt praises Tamil Nadu government
× RELATED சட்ட விரோத குவாரிகள் தொடர்பாக புகார்...