பனை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒரு லட்சம் பனை விதைகள்: சபாநாயகர் அப்பாவு வழங்கினார்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று,  பனை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பனை விதைகளை வேளாண் துறைக்கு சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு வழங்கினார். தமிழ்நாட்டில் பனை மரங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு தற்போதுள்ள பனை மரங்களை பாதுகாப்பதுடன், கூடுதலாக பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, நடப்பாண்டு 30 மாவட்டங்களில், 76 லட்சம் பனை விதைகளையும், ஒரு லட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று 2021-22ம் ஆண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் தனி நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இந்த பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு, ஒரு லட்சம் பனை விதைகளை வழங்குவதாக வேளாண் நிதிநிலை அறிக்கையின்போது உறுதி அளித்தார். அதன்படி, சட்டப்பேரவை தலைவரால் வழங்கப்பட்ட ஒரு லட்சம் பனை விதைகள், ஏரிக்கரை, சாலையோரம் மற்றும் விவசாய நிலங்களில் நடவு செய்யும் பனை மேம்பாட்டு திட்டத்தை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

அப்போது, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, வேளாண்மை துறை இயக்குநர் அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தாதேவி, கூடுதல் இயக்குநர் ஸ்வரன் குமார் ஜடாவத் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

More
>