×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 832 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் திறப்பு: உற்சாகத்துடன் வந்த மாணவ, மாணவிகள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 239 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் இன்று (செப்.1) காலை திறக்கப்பட்டன. மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் வந்தனர். தமிழகத்தில் கொரோனா தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, பள்ளிகள் திறக்கவில்லை. கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து நேற்று முதல் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த வேண்டும் என அரசு சார்பில் வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 239 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன.

239 பள்ளிகளிலும் சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. அரசு மற்றும் சுயநிதி , அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகள் என 63 மேல்நிலைப் பள்ளிகளும், 63 உயர்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இதேபோல் 16 உயர்நிலைப் பள்ளிகளும் 44 மேல்நிலைப் பள்ளிகளும் மெட்ரிக் பள்ளிகளாக உள்ளது. சிபிஎஸ்இ பள்ளிகளைப் பொறுத்தவரை 17 உயர்நிலைப் பள்ளிகளும் 35 மேல்நிலைப் பள்ளிகளும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று திறக்கப்பட்டன. பள்ளிகளில் பணிபுரியும் 7095  ஆசிரியர்களில், 6520 பேர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.  ஆசிரியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தி கொண்டு, அதற்கான சான்றிதழை எடுத்து வரவேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்செல்வன் வலியுறுத்தினார்.

அதன்படி, ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ்களை கொண்டு சென்றனர். செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 593 பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 376 மாணவ, மவாணிகள் பள்ளிக்கு உற்சாகமாக வந்தனர். பள்ளி நுழைவாயிலில் மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்து, கிருமி நாசினி வழங்கி அனுமதித்தனர். அனைவரும் முக கவசம் அணியும்படி அறிவுறுத்தப்பட்டனர். செங்கல்பட்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா பள்ளி, அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா, செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது அவர்கள், ‘‘மாணவர்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.’’ என்று அறிவுறுத்தினர். ெதாடர்ந்து, ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர், பள்ளிக்கு வரும் மாணவர்களின் மனநிலை குறித்து, தினகரன் நாளிதழுக்கு, அவர்கள் அளித்த பேட்டி. முகிலன், வாலாஜாபாத்: நீண்ட காலத்துக்கு பின் பள்ளி செல்வது மிகவும் புதிய அனுபவத்தை தருகிறது. சக நண்பர்களை நேரில் சந்திக்காமல் செல்போனிலேயே பேசி வந்தோம்.

அந்த நிலைமாறி, சக நண்பர்களை பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. தினமும் கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வகுப்புகளில் பாடங்களை கவனித்து வந்த நிலையில், தற்போது ஆசிரியர்களின், நேரடி பார்வையில் பாடத்தை கவனிப்பது, புதிய அனுபவத்தை தருகிறது. விளையாட்டு மைதானத்தில் சக நண்பர்களுடன் விளையாட போவதும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நிவேதா, திருப்போரூர்: கடந்த 3 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. வாட்சப் மூலம் பாடங்களை படித்தேன். கல்வி தொலைக்காட்சி மூலமும் ஓரளவுக்கு படித்தோம். இப்போது, பள்ளிகள் திறந்து விட்டதால் ஆசிரியர்களுடன் நேரடியாக சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற வாய்ப்பு கிடைத்துள்ளது.

பாடங்களையும் குறைத்துள்ளது நல்லதுதான். நண்பர்களையும் பார்க்க முடிகிறது. பள்ளி வளாகத்தில் நுழையும்போது ஒரு வித சிலிர்ப்பு ஏற்பட்டது. முத்துசினேகா, மாமல்லபுரம்: பல மாதங்களாக, வீட்டிலேயே சிறைப்பட்டு கிடந்தோம். கொரோனா தொற்றின் காரணமாக தோழிகள் மற்றும் உறவினர்கள் வீட்டுக்கு செல்ல எங்கள் பெற்றோர் அனுமதிக்கவில்லை. சிறையில் இருந்து விடுபட்ட பறவையை போல எங்கள் தோழிகளை காண பள்ளிக்கு வந்திருக்கிறோம். பல மாதங்களுக்கு பிறகு தோழிகள் மற்றும் ஆசிரியர்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. இது ஒரு முக்கியமான தருணம். சேஷாத்திரி, திருக்கழுக்குன்றம்: கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன.

இதனால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் சரி வரபாடங்களை படிக்க முடியாத நிலை இருந்தது. தற்போது, பள்ளிகள் திறப்பு என்பது எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. மேலும், நேரடியாக பள்ளிக்கு சென்று படிப்பது, எங்களுக்கு பாடங்களை முழுமையாகவும், புரிந்து கொண்டு தரமாகவும் படிக்க ஏதுவாக இருக்கும். சத்யபிரியா, செங்கல்பட்டு: கொரோனா பாதுகாப்புடன் பள்ளிக்கு வந்துள்ளோம். ஆசிரியர்களின் நேரடி கண்காணிப்பில் பாடம் எடுத்தால் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆன்லைன் வகுப்பில் இருந்து விடுபட்டது, அனைத்து மாணவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் அளித்து பள்ளிகளை திறந்துள்ள தமிழக அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

தடுப்பூசி கட்டாயம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கும் 16 பொறியியல், 9 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 10 தொழில்நுட்ப கல்லூரிகளின் பிரதிநிதிகளுடன், கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு முறைகளை அனைத்து கல்லூரிகளும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தாத மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கும் தடுப்பூசி செலுத்த  தேவையான அறிவுரைகளை வழங்க வேண்டும். மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள முகாம்கள் நடத்த வேண்டுமானால் மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம் என கலெக்டர் கூறினார்.

Tags : Kanchipura ,Sengalupu , Kanchipuram, Chengalpattu districts open 832 high and secondary schools: students who came with enthusiasm
× RELATED காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற...