×

இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை மீண்டும் இன்று கூடுகிறது: மூன்று துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது

சென்னை:  தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 13ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் தமிழக அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான திருத்திய நிதி பட்ெஜட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறைக்கு என்று தனி பட்ஜெட் 14ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன்பிறகு 4 நாட்கள் நிதி, வேளாண் பட்ஜெட் மீதான விவாதம்
நடந்தது. தொடர்ந்து கடந்த 23ம் தேதி முதல் துறை ரீதியான மானியக்கோரிக்கை மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடந்தது. அதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறையை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். இந்த நிலையில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை, கிருஷ்ண ஜெயந்திக்கு பேரவைக்கு விடுமுறை.

2 நாட்கள் விடுமுறைக்கு பின் சட்டப்பேரவை மீண்டும் இன்று காலை 10 மணிக்கு கலைவாணர் அரங்கத்தில் உள்ள பேரவை கூடுகிறது. இதில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தொழில்துறை, தமிழ் வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுஆகியோர் பதிலளித்து பேசுகின்றனர். தொடர்ந்து நாளை மாற்று திறனாளிகள் நலம் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை. 2ம் தேதி குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை. 3ம் தேதி வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை. 4ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சுற்றுலா-கலை மற்றும் பண்பாட்டு துறை மானியக்கோரிக்கை விவாதமும் நடக்கிறது. தொடர்ந்து வருகிற 13ம் தேதி வரை ஒவ்வொரு துறை ரீதியான விவாதம் நடக்கிறது. மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட வாய்ப்புள்ளது.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 13ம் தேதி முதல் நடந்து வருகிறது. பேரவைக்கு நிறைய பேர் புதிய எம்எல்ஏக்களாக வந்தனர். அவர்கள் கேள்விகள் எதுவும் கொடுக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல், அமைச்சர்களும் புதியவர்கள். இதனால், சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்து வினாக்கள்-விடை நேரம் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இந்நிலையில் இன்று முதலில் வினா விடை நேரம் எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிகிறது. உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து பேசுவார்கள். மேலும், பல்கலைக்கழக சட்ட திருத்தம் மசோதாவும் தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Tags : TN Assembly , Tamil Nadu Legislature
× RELATED தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர்...