×

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் முறைகேடாக ஒதுக்கப்பட்ட 660 சாலை புனரமைப்பு ஒப்பந்தங்களை ரத்து செய்தது சென்னை மாநகராட்சி!!

சென்னை : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் முறைகேடாக ஒதுக்கப்பட்ட 660 சாலை புனரமைப்பு ஒப்பந்தங்களை சென்னை மாநகராட்சி ரத்து செய்துள்ளது. சென்னை மாநகராட்சி சார்பில் கடந்த அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட புதிய ஒப்பந்தங்களில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக தமிழக சட்டமன்ற தேர்தலின் போது நடத்தை விதிமுறைகளை மீறி சென்னையில் உள்ள 3,200 சாலைகள் புனரமைப்பு பணிகளுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஒப்பந்தம் அளிக்கப்பட்ட சாலைகளின் தரத்தை ஆய்விட்டு விவரங்களை அளிக்க மண்டல துணை ஆணையாளர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டு இருந்தார்.

2 வாரங்கள் நடைபெற்ற ஆய்வில் புனரமைப்பு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட சாலைகளில் 660 சாலைகள் தரமாக இருப்பதும் புனரமைப்பு தேவைப்படாதவை என்றும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து புனரமைப்பு தேவைப்படாத 600 சாலைப் பணி ஒப்பந்தங்களை சென்னை மாநகராட்சி அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டது. இவற்றில் பெரும்பாலான சாலைகள் பேருந்துகள் செல்லாத பகுதிகளின் உட்புறச் சாலைகள் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. 660 முறைகேடான ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளதன் மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஏற்பட இருந்த 43 கோடி ரூபாய் இழப்பு தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  


Tags : TN Assembly ,Chennai , சென்னை மாநகராட்சி
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...