×

மீனாட்சியம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் பிட்டுக்கு மண் சுமந்த லீலை

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடந்தது. இன்று விறகு விற்ற லீலை நடக்கிறது.மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிளையாடல், கோயில் வளாகத்தில் உள்ள பழைய கல்யாண மண்டபத்தில் பக்தர்களின்றி நடந்தது. பகல் 1.05 மணிக்கு பழைய கல்யாண மண்டபத்தில் ‘பிட்டுக்கு மண் சுமந்த லீலை’ பட்டர்களால் அரங்கேற்றப்பட்டது. முன்னதாக சுவாமி சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் ஆடி வீதிகளில் சிறப்பு அலங்காரத்தில் உலா வந்தனர்.இதில் சுவாமி சுந்தரேஸ்வரர் தங்கத்தட்டில் மண் சுமக்கும் கோலத்தில் பிரியாவிடையுடன் காட்சி அளித்தார். பட்டர்கள் சுவாமியாகவும், மன்னராகவும் வேடமிட்டு திருவிளையாடலை அரங்கேற்றினர்.

சுவாமியாக வேடம் அணிந்த பட்டர், மூதாட்டி வந்திக்காக அளந்து விட்ட கரையை அடைக்காமல் தூங்குவது, மன்னராக வேடமிட்ட பட்டர், பொற்பிரம்பால் சுவாமியாக வேடமிட்ட பட்டரை அடிப்பது உள்ளிட்ட பல்வேறு காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி சுந்தரேஸ்வரர், மீனாட்சியம்மன் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி கோயில் வளாகத்தில் வலம் வந்தனர். ஆவணி மூலத் திருவிழாவின் கடைசி நாளான இன்று, இறைவனின் விறகு விற்ற லீலை திருவிளையாடல் நடக்கிறது.

பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் குறித்து மீனாட்சி கோயில் பட்டர்கள் கூறும்போது, ‘‘திருவிளையாடல்களில் ‘பிட்டுக்கு மண் சுமந்தது’ முக்கிய திருவிளையாடலாகும். வைகையாற்றில் பெருக்கெடுத்த வெள்ளத்தை அடைக்க வீட்டிற்கொருவர் வர வேண்டும் என்று அரசர் ஆணையிடுகிறார். வந்தி எனும் பிட்டு விற்கும் மூதாட்டிக்கு உறவென யாரும் இல்லை. இறைவனே கூலி ஆளாக வடிவெடுத்து வந்து, மூதாட்டி தரும் பிட்டுக்காக மண் சுமக்க சம்மதித்தார். ஆனால், தன் பங்கு கரையை அடைக்காமல் பிட்டு உண்டு ஆடிப்பாடி ஆழ்ந்து உறங்கிப் போனார். பார்வையிட வந்த மன்னனோ, தன் கையிலிருந்த பிரம்பால் முதுகில் அடிக்க, அனைத்து உலக உயிர்கள் முதுகிலும் அந்த அடி பட்டது. இதன்பிறகே இறைத்திருவிளையாடலை அரசன் உணர்ந்தார்’’ என்றனர்.

Tags : Meyatchumman Temple Orchestras ,Pitt ,Origin Festival , Meenakshiamman Temple Avani Moolathrivilavil Pittu Man Sumantha Leela
× RELATED நடிப்புக்கு முழுக்கு: பிராட் பிட் முடிவு