கோவை: கோவை மாவட்டம் ஒட்டர்பாளையம் கிராமத்தில் பட்டியலின கிராமத்தை சேர்ந்த தலையாரியை காலில் விழ வைத்த விவகாரத்தில்,வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ளது ஒட்டர்பாளையம் கிராமம். இங்குள்ள கிராம நிர்வாக அலுவலகத்துக்கு கோபாலகிருஷ்ணன் என்பவர் சொத்து விவரங்கள் சரிபார்க்க வந்துள்ளார். அங்கு அலுவலகத்தில் விஏஓ கலைச்செல்வியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது வாக்குவாதத்தை தடுக்க முயன்ற கிராம உதவியாளர் முத்துசாமியையும் ஊரில் இருக்க முடியாது என மிரட்டியுள்ளார் கோபாலகிருஷ்ணன்.
இதனால் பயந்துபோன முத்துசாமி அவரது காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். பின்னர் பயந்து போய் காலில் விழுந்த முத்துசாமியை மன்னித்துவிட்டேன் எழுந்திரி என கோபாலகிருஷ்ணன் சொல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. பட்டியலின சமூகத்தை சேர்ந்த முத்துச்சாமி காலில் விழுந்த வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. சாதிய வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் எழுந்ததை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.