×

கொரோனாவால் தடைபட்ட பணிகளை முடிக்க அவகாசம் கோரி ஒப்பந்ததாரர்கள் வழக்கு: பரிசீலிக்குமாறு மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘‘சென்னை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கத்தில், உறுப்பினர்களுக்கு மாநகராட்சி பணிகளான சாலை, மழை நீர் வடிகால்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பணிகளை 6 மாதம் அல்லது ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டும். கொரனோ பரவல் காரணமாக, 2020ம்  ஆண்டு மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை முழு ஊரடங்கு அமல்படுத்தபட்டிருந்தது. இதனால் கட்டுமான பணியாளர்கள் சொந்த ஊருக்கு சென்றுவிட்டனர். தேர்தல் நடத்தைவிதிகள் அமலில் இருந்ததால் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை.

தேர்தல் முடிவடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து கொரோனாவின் 2வது அலையை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கபட்டதால் பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. எனவே, பணிகளை முடிக்க கூடுதல் காலஅவகாசம் வழங்கவேண்டும். இந்த டெண்டர்களை ரத்து செய்யக்கூடாது என்று சென்னை மாநகராட்சிக்கு கடந்த ஜூன் 22ம் தேதி மனு அளித்தோம். எங்கள் மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும்’’ என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் வி.இளங்கோவன் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் சங்கத்தின் கோரிக்கை மனுவை 4 வாரங்களில் பரீசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Tags : ICC , ICC court directs corporation to consider case against contractors seeking permission to complete works blocked by Corona
× RELATED ஐசிசியின் மார்ச் மாதத்திற்கான சிறந்த...