×

ஒன்றிய அரசின் உத்தரவின்படி டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என அறிவிக்க வேண்டும்: முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து மாநிலங்களிலும் 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள் மத்திய அல்லது மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், இந்த தேர்வுக்கான சான்றிதழ் 7 ஆண்டுகள் மட்டுமே செல்லத்தக்கது என்றும், அதற்குள் பணிக்கு சேராதவர்கள் மீண்டும் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதியும் இருந்தது. இதன் காரணமாக, 7 ஆண்டுகளாக ஆசிரியர் பணி கிடைக்காதவர்கள் மீண்டும் தகுதி தேர்வு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என்றும், 2011ம் ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பொருந்தும் வகையில் முன் தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்து, 7 ஆண்டுகள் நிறைவடைந்தவர்களுக்கு புதிதாக சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இதுகுறித்து தமிழக அரசின் பள்ளி கல்வி துறை எவ்விதமான ஆணையையும் வெளியிடவில்லை. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் ஆசிரியர் பணியில் சேர முடியாமல் தவிக்கிறார்கள்.இது வருத்தத்தை அளிக்கிறது. எனவே, முதல்வர் இதில் தனி கவனம் செலுத்தி, ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்கது என ஆணையை வெளியிட்டு, அவர்கள் பணிகளில் சேர ஆவன செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Union Government ,Panersalvam , O. Panneerselvam's request to the Chief Minister:
× RELATED கட்சி விரோத செயல்பாடுகளில்...