×

ரூ.100 கோடி லஞ்சம் கேட்ட விவகாரம் அனில் தேஷ்முக்கிற்கு 3ம் முறையாக சம்மன்: காணொலியில் விசாரிக்க மறுப்பு

மும்பை: பண மோசடி வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு அமலாக்கத்துறை 3வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது. மும்பையில் உள்ள பார்கள், ஓட்டல் உரிமையாளர்களிடம் இருந்து மாதம்தோறும் ரூ.100 கோடி மாமூல் வாங்கி கொடுக்கும்படி, பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள  போலீஸ் உதவி இன்ஸ்பெக்டர் சச்சின் வாஷேக்கு, அப்போது  உள்துறை அமைச்சராக இருந்த அனில் தேஷ்முக் உத்தரவிட்டதாக மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் கடந்த மார்ச் 20ம் தேதி  குற்றம்சாட்டி இருந்தார். இது பற்றி சிபிஐ விசாரணைக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், கடந்த ஏப்ரல் 5ம் தேதி அனில் தேஷ்முக் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

இவர் மீது அமலாக்கத் துறையும் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்காக கடந்த மாதம் 26ம் தேதி ஆஜராகுமாறு தேஷ்முக்கிற்கு அமலாக்கத் துறை முதல் சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. பின்னர், ஜூன் 29ம் தேதி விசாரணைக்கு வரும்படி 2வது சம்மன் அனுப்பப்பட்டது. இதிலும் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மாறாக, கொரோனா காரணமாக வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தும்படி கடிதம் எழுதினார். இதை ஏற்க மறுத்துள்ள அமலாக்கத் துறை, 5ம் தேதி (நாளை) விசாரணைக்கு ஆஜராகும்படி 3வது சம்மனை நேற்று அனுப்பியது.

Tags : Anil Deshmukh , Anil Deshmukh summoned for Rs 100 crore bribery case for third time: Refusal to investigate on video
× RELATED மாமூலாக வசூலித்த பணத்தை மாற்ற 27 போலி...