×

பூச்சி கட்டுப்பாட்டில் பொறிகளின் பங்கு-வேளாண் பேராசிரியர்கள் விளக்கம்

மன்னார்குடி : வேளாண்மையில் தீமை செய்யும் பூச்சிகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பதற்கு பெரும்பாலும் ரசாயன மருந்துகளை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். ஆனால், தீமை செய்யும் பூச்சிகளின் நடமாட்டத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது எளிது. அதற்கு பல்வேறு பொறிகளின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
இது குறித்து வம்பன் பயறுவகை ஆராய்ச்சி மைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா ரமேஷ், பேராசிரியர் மற்றும் தலைவர் குணசேகரன், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் தெரிவித்துள்ளதாவது:

விளக்கு பொறி: விளக்குப் பொறியானது பூச்சிகள் நம் வயல்களில் தீமை செய்யும் பூச்சிகள் உருவாவதை கண்காணித்து அவற்றின் தாக்குதலை முன்னறிவதற்கும், மேலும் அவை எண்ணிக்கையில் அதிகரிப்பதைத் தெரிந்து கொள்வதற்கும் உதவிபுரிகின்றன. எனவே விளக்குப் பொறிகளானது தகுந்த பயிர் பாதுகாப்பு முறைகளை சரியான சமயத்தில் கடைபிடிப்பதற்கும் உதவுகின்றன.
5 ஏக்கருக்கு 1 விளக்குப் பொறி என்ற அளவில் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை எரியவிட்டு அவற்றில் கவரப்படும் பூச்சிகளை அழித்துவிட வேண்டும். மேலும் இரவு நேரம் முழுவதும் விளக்குப் பொறியினை எரிய விடவேண்டியதில்லை. தற்போது சூரிய ஒளி ஆற்றலைப் பயன்படுத்தி இயங் கும் விளக்குப் பொறிகள் உள்ளன. இவற்றை ஒரு முறை ஆன் செய்து எரிய விட்டால் அது தானாகவே மாலை நேரங்களில் எரிந்து சூரிய உதயத்தின் போது எரிவது நின்றுவிடும்.

எனவே தினந்தோறும் இயக்குவது மற்றும் நிறுத்துவதற்கு ஆட்கள் தேவையில்லை. மேலும் இந்த ஒளியானது அதிக பிரகாசம் இல்லாமல் பூச்சிகளைக் கவர்ந்திழுக்கும் எல்இடி பல்புகள் பயன்படுத்தப்படுவதால் தொலை தூரத் திலுள்ள வயல்களிலிருந்து பூச்சிகள் இதனை நோக்கி வருவதற்கு வாய்ப்பில்லை என்பது இதன் சிறப்பாகும். மேலும் அதிக ஆண்டுகள் உழைக்கும் தன்மைகொண்டவை.

இனக்கவர்ச்சிப் பொறி: இயற்கையில் பெண் அந்துப்பூச்சிகள் ஒருவித ரசாயனப் பொருளை தன் உடலிலுள்ள சிறப்பு சுரப்பிகளின் வாயிலாக சுரக்கின்றன. அவை காற்றுடன் கலக்கப்பட்டு அந்த இனத்தின் ஆண் அந்துப் பூச்சிகளுக்கு சமிக்கை அளித்து அவற்றை கவர்ந்து இழுத்து இனச்சேர்க்கை புரியும். இவ்வாறான ரசாயன பொருளானது செயற்கையாக ஆய்வகங்களில் தயாரிக்கப்பட்டு சிமிழ் போன்ற குப்பிகளில் அடைத்து விற்கப்படுகிறது. இந்த இனக்கவர்ச்சிப் பொறியினை ஏக்கருக்கு 5 என்ற அளவில் வயலில் ஆங்காங்கே வைத்து விட வேண்டும். இதிலிருந்து வெளிவரும் வாசனைக்கு ஈர்க்கப் படும் ஆண் அந்துப்பூச்சிகளானது, இனக்கவர்ச்சிப் பொறியினுடன் இணைக்கப்பட்டுள்ள பாலிதீன் பைகளில் சேமிக்கப்படும். பின்பு அவைகளை தனியே எடுத்து அழித்துவிடவேண்டும்.

மஞ்சள் வண்ண ஒட்டும் அட்டை பொறி: பூச்சிகளானது பொதுவாக மஞ்சள் நிறத்திற்கு அதிக ஈர்ப்புத்தன்மைக் கொண்டவை. எனவே சாறு உறிஞ்சும் பூச்சிகளான வெள்ளை ஈக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க மஞ்சள் வண்ண ஒட்டும் அட்டைப் பொறிகளை ஒரு ஏக்கருக்கு 10 என்ற விகிதத்தில் வைக்க வேண்டும்.

பயிர்களின் வளர்ச்சி உயரத்தை விட உயரமாக இருக்குமாறு குச்சிகளில் பொருத்தி வயலில் ஆங்காங்கே வைத்துவிட வேண்டும். மஞ்சள் வண்ண ஒட்டும் அட்டை பொறியில் பூச்சிகள் ஒட்டிக்கொண்டு வெளிவரமால் இறந்துவிடும். இவற்றின் இனப்பெருக்கத்திறன் பாதிக்கப்பட்டு வயலில் பூச்சிகளின் தாக்கம் குறைவாக இருக்கும்.நன்மைகள்: சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதில்லை. தீமை செய்யும் பூச்சிகளுக்கு எதிர்ப்புத்தன்மை உருவாவதில்லை. நன்மை செய்யும் பூச்சிகளுக்கு பாதிப்பில்லை. மற்ற இயற்கை முறைகளோடு இணைந்து பயன்படுத்தலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Mannargudi: Mostly only chemicals to protect crops from pests in agriculture
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்